

‘சிஏபிஎஃப் தேர்வை இனி மாநில மொழிகளில் எழுதலாம்’: சிஏபிஎஃப் என்னும் மத்திய ஆயுதக் காவல் படை காவலர்களுக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் தவிர இனி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்திய ஆயுதப் படையில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கும், மாநில மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவின் மூலமாக லட்சக்கணக்கான தேர்வர்கள் தங்களின் தாய்மொழியில் தேர்வெழுதுவதுடன் தங்களுக்கான தேர்வு வாய்ப்புகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த வாரம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதியிருந்த கடிதத்தின் விளைவாக, மத்திய ஆயுதக் காவல் படை காவலர் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் இந்த முடிவை மனதார வரவேற்கும் அதேவேளையில், ஒன்றிய அரசால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளிலும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற நமது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியில் ஆணவக் கொலை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கலப்புத் திருமணம் செய்த மகனை கொலை செய்த தந்தையை போலீஸார் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தடுக்க வந்த பாட்டியும் வெட்டிக் கொல்லப்பட்டார். மருமகள் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
“திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற உதவுவோம்” - முதல்வர்: திருநங்கைகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "திருநங்கையர் என்ற சொல்லால் அவர்தம் மாண்பு காத்ததோடு, நாட்டிலேயே முதன்முறையாக நலவாரியத்தைத் தொடங்கிச் செயலாலும் அவர்களைப் பேணியவர் கருணாநிதி! அதைத்தான் திருநங்கைகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். கருணாநிதி வழியில் திருநர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்வதற்கான உதவிகளைத் தொடர்வோம்!" என்று கூறியுள்ளார்.
‘கோடை காலத்தில் தடையின்றி மின் விநியோகம்’ - அமைச்சர் உறுதி: கோடை காலத்தில் எந்தவித தடையுமின்றி சீரான மின் விநியோகம் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
நண்பர்களிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை: சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரஃபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை வலைதளம் வாயிலாக அண்ணாமலை வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இந்நிலையில் அவர், “நான் வெளியிட்ட வங்கி பரிவர்த்தனைகளின் மூலமாக எனது நண்பர்களின் விவரங்களும் பொதுவெளியில் வெளியானதால், நண்பர்களிடம் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும்”: "நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது? மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
“எங்களைக் குறிவைக்கின்றனர்” - கேஜ்ரிவால் ஆவேசம்: "நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை" என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில் சிபிஐயும், அமலாக்கத் துறையும் எங்களுக்கு எதிராக போலியான சாட்சியங்களை அளித்துள்ளன. ஆனால், உண்மை வேறாக உள்ளது. சிபிஐ வசமோ, அமலாக்கத் துறையிடமோ எந்த உண்மையான ஆதாரங்களும் இல்லை. அதனால், அவர்கள் போலியான சாட்சியங்களைக் கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்தும் செயல்களும் நடைபெறுகின்றன. எங்கள் மீது ரூ.100 கோடி ஊழல் புகார் சொல்பவர்களால் ஏன் ஆதாரங்களைக் கொடுக்க இயலவில்லை.
பிரதமர் மோடியிடம் நான் ஒரே ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் வேறு யாருமே நேர்மையானவர்கள் இல்லை என்றே அர்த்தம். கடந்த 75 ஆண்டுகளில் எந்த ஓர் அரசியல் கட்சியும் இத்தகைய நெருக்கடிகளை சந்தித்திருக்காது. ஏனென்றால், ஆம் ஆத்மி கட்சி மக்களின் மனங்களில் வறுமை ஒழிப்பு, கல்வி போன்ற நம்பிக்கைகளை விதைத்துள்ளது. எங்களைக் குறிவைத்து அந்த நம்பிக்கையை அழிக்க நினைக்கின்றனர்” என்று கூறினார்.
நாளுக்கு நாள் தேறி வருகிறேன்: ரிஷப் பந்த்: ‘நாளுக்கு நாள் நான் தேறி வருகிறேன்’என இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்தபோது ரிஷப் பந்த் விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு மோசமான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் வெள்ளிக்கிழமை ஐபிஎல் கிரிக்கெட்டில் தான் விளையாடி வரும் டெல்லி கேபிடல்ஸ் அணியினரை சந்தித்திருந்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கலவர பூமி ஆன சூடான்; இந்தியர்களுக்கு எச்சரிக்கை: சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது.
இந்நிலையில், சூடான் நாட்டின் கர்த்தூம் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. நாடு முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, சூடானில் உள்ள இந்திய துணை தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் சூடானில் துப்பாக்கிச் சூடும், கலவரமும் நடப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அமைதியாக அடுத்த தகவலுக்கு காத்திருக்குமாறும் தெரிவித்துள்ளது.
ஜப்பான் பிரதமரின் நிகழ்ச்சியில் மர்மப் பொருள் வீச்சு: ஜப்பான் நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திடீரென அவர் மீது வீசப்பட்ட மர்மப் பொருள் காரணமாக நிகழ்விடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. மர்மப் பொருள் வீசிய நபரை பாதுகாப்புக் குழுவினர் மடக்கிப் பிடித்தனர். அவர் வீசியது ஸ்மோக் பாம்ப் எனப்படும் புகையை எழுப்பும் குண்டாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.