

சென்னை: சட்டப்பேரவையில் வீட்டு வசதித்துறையின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:
திருமழிசை அருகில் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் சர்வதேச தரத்தில் ரூ.40 கோடியில் விரிவாக்கம் செய்யப்படும். திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் 5 கி.மீ. நீள கடற்கரை மேம்படுத்தப்படும்.
சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி, வரதராஜபுரத்தில் ரூ.29 கோடியில் ஒப்பந்த பேருந்துகள் நிறுத்துமிடம் அமைக்கப்படும். கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரை முதல் அக்கரை வரை முதல்கட்டமாக 5 கி.மீ. நீளத்துக்கு சைக்கிள் பாதை மற்றும் நடைபாதை ரூ.20 கோடியில் அமைக்கப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து ஊரப்பாக்கம் ஏரிவரை ரூ.17 கோடியில் புதியமழைநீர் வடிகால் அமைக்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகம் மருத்துவ சிகிச்சை மையத்துடன் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் ரூ.8 கோடியில் பூங்கா அமைக்கப்படும்.
கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் திறக்கப்படும். சென்னை பெருநகர பகுதியில் மனைப் பிரிவுகளுக்கான திட்ட அனுமதி இணையவழியாக வழங்கப்படும்.
அண்ணாசாலை - டேம்ஸ்சாலை - ஜிபி சாலை சந்திப்பில்நடைமேம்பாலம் அமைக்கப்படும். காசிமேடு கடற்கரை ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட ரூ.701 கோடி மதிப்பிலான 50 திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.