

சென்னை: போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், விரைவாக, சொகுசாக செல்லமுடிவதால், சென்னையில் மெட்ரோரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது தினமும் 2.10 லட்சம்முதல் 2.50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி, பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதி கொண்டு வரப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில்களில் பயணிகள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்ல மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சிசிடிவி கேமராக்கள் மூலமாக மெட்ரோ ரயில் நிலையங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம். மெட்ரோ ரயில் நிலையங்கள், வாகன நிறுத்தப் பகுதிகளில் யாராவது தேவையின்றி நீண்ட நேரம் காத்திருப்பதை கண்டால், அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகள், அலுவலகங்கள், நிறுவனங்களை இணைக்கும் வகையில் சிற்றுந்து, ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பைக் டாக்ஸி உள்ளிட்ட இணைப்பு வாகன வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். சில ஐ.டி. நிறுவனங்களுக்கு மெட்ரோ அலுவலர்கள் நேரடியாக சென்று பேசி வருகின்றனர். அவர்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவும் இணைப்பு வாகன வசதி ஏற்படுத்தப்படுகிறது.
இதுபோல, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பெண்கள் அச்சமின்றி பாதுகாப்பாக செல்லும் வகையில், பெண்களே இயக்கும் இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தனியார் நிறுவனத்துடன் பேசி வருகிறோம். பெண்களே இயக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில், பெண் பயணிகள் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.