

ஈரோடு: அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சியில், பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலங்கள், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக பழங்குடி மக்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் ஊராட்சியில் 35 கிராமங்கள் உள்ளன. இவற்றில் 20 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களில் பழங்குடியின மக்கள் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். கடந்த பல ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வந்த பழங்குடியின மக்களுக்கு, வருவாய்த்துறை சார்பில் நிபந்தனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலங்களை பெற்ற பழங்குடியின மக்கள் 10 ஆண்டுகளுக்கு அதனை விற்பனை செய்யக் கூடாது. 10 ஆண்டுகள் தாண்டியபின், பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு பட்டா மற்றம் செய்து கொடுக்கும் வகையில் நிபந்தனையுடன் நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமவெளிப்பகுதியில் வசிப்போர், பர்கூர் மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டவும், சொகுசு குடியிருப்புகளைக் கட்டவும், பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை வாங்கியுள்ளனர்.
விதிமுறைகளுக்கு மாறாக இவ்வாறு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க நிர்வாகி வி.பி.குணசேகரன் கூறியதாவது: பர்கூர் மலைப்பகுதியில் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலங்கள், சமவெளிப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியினர் அல்லாதவர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரிடம் உள்ள ஏழ்மை, அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக இந்த நிலத்தை சிலர் வாங்கியுள்ளனர்.
மலைப்பகுதி என்பதால், இங்கு கேளிக்கை விடுதிகள், ரிசார்ட்டுகள் அமைக்க பழங்குடியினரின் நிலங்களை வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலத்தை, பழங்குடியினர் அல்லாதவருக்கு விற்பனை செய்யவோ, பட்டா மாற்றம் செய்யவோ கூடாது என்ற விதிமுறை உள்ளது.
ஆனால், அதனை மீறி, நிபந்தனைப் பட்டா நிலங்கள், வருவாய்த்துறையினரால் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவுத்துறையினர் இந்த நிலங்களை விற்பனை செய்ததை சட்டவிரோதமாக பதிவு செய்துள்ளனர். இத்தகைய முறைகேட்டிற்கு வருவாய்துறையினரும், பத்திரப்பதிவுத்துறையும் உடந்தையாக உள்ளனர். பர்கூர் ஊராட்சியில் நடந்த இந்த முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோபி கோட்டாட்சியர் தலைமையில் இந்த மாதம் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். பர்கூர் மலைப்பகுதியைப் போலவே, தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் நிபந்தனைப் பட்டா நிலங்களும் இதுபோல சட்டவிரோதமாக அதிகாரிகள் துணையோடு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.