

திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே தனது பிறந்தநாளன்று ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த தூசி கிராமத்தில் வசிப்பவர் அரிகிருஷ்ணன். இவரது மகன் இளமாறன் (8). ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு நேற்று (ஏப்ரல் 10) பிறந்தநாள். இதையொட்டி, பள்ளிக்கு புதிய ஆடை அணிந்து சென்று வீடு திரும்பினார். பின்னர் கேக் வாங்கி வருமாறு பெற்றோரிடம் கூறிவிட்டு, விளையாடச் சென்றுள்ளார்.
கேக் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, வீட்டில் இளமாறன் இல்லை. நீண்ட நேரமாகியும் வராததால், தூசி பெரியார் நகரில் வசிக்கும் தாத்தா வீட்டுக்கு சென்று தேடினர். அங்கும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், தூசி கிராமத்தில் உள்ள குளம் மற்றும் ஏரியில் குளிக்க சென்று, ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் மூலம் குளத்தில் இன்று (ஏப்.11) காலை தேடிய போதும், சிறுவன் குறித்து தகவல் இல்லை. பின்னர் ஏரியில் தேடும் பணிணை மேற்கொள்ளப்பட்டன. நீண்ட போராட்டத்துக்கு பிறகு, உயிரிழந்த நிலையில் ஏரியில் இருந்து இளமாறனின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண் கலங்க செய்தது.
இது குறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று சிறுவன் உயிரிழந்த சம்பவம் தூசி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.