ராயக்கோட்டை, சூளகிரி பகுதியில் வெள்ளரி விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிவு

ராயக்கோட்டை அருகே மெட்டரை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளரிக்காய்.
ராயக்கோட்டை அருகே மெட்டரை கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள வெள்ளரிக்காய்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டை, சூளகிரி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால், வெள்ளரிக்காய் விலை சரிந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் காய்கறி சாகுபடியில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். சூளகிரி, ராயக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அனைத்து வகையான காய்கறிகளை பருவகாலத்திற்கு ஏற்றவாறு பயிர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பீன்ஸ், கேரட், தக்காளி, கத்தரிக்காய், கொத்தமல்லி, புதினா, வெள்ளரி ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது ராயக்கோட்டை, சூளகிரி, அயர்னப்பள்ளி, உலகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 300 ஏக்கருக்கும் மேல் வெள்ளரி பயிரிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பெய்த மழையால் வெள்ளரி விளைச்சல் அதிகரித்தது. தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் வெள்ளரிக்காய் நுகர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும் விளைச்சல் அதிகரித்ததால், விலை சரிந்துள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் விலை நிர்ணயம்: இதுதொடர்பாக ராயக் கோட்டை, சூளகிரி பகுதி விவசாயிகள், வியாபாரிகள் கூறும்போது, வெள்ளரிக்காய் விளைச்சலில் ஓரளவுக்கு வருவாய் கிடைப்பதால் விவசாயிகள், வெள்ளரி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் வெள்ளரிக்காய்களுக்கு, வெளியூர் சந்தைகளில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

ஓசூர், ராயக்கோட்டை சந்தையில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், வெள்ளரிக்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், வியாபாரிகள் தோட்டத்தை குத்தகை முறையில் ஒப்பந்தம் எடுத்துக் கொள்கின்றனர். வியாபாரிகள் நேரடியாக கூலி ஆட்கள் மூலம் அறுவடை செய்து, அங்கேயே தூய்மைப்படுத்தி தரம் பிரிக்கின்றனர்.

தரத்துக்கு ஏற்ப விலை: 50 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளரிக்காய் கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது விளைச்சல் அதிகரிப்பால் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2 மடங்கு விலை சரிவால் விவசாயிகளுக்கும், குத்தகை எடுத்த வியாபாரிகளுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடைகாலம் தொடங்கி உள்ளதால் நுகர்வு அதிகரித்து, விலை உயரும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in