

கோவை: குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஆய்வுக் கூட்டத்துக்கு பின்னர், கூடுதல் டிஜிபி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சட்டம் - ஒழுங்கு, குற்றத் தடுப்பு தொடர்பான காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம், மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று (ஏப்.7) நடந்தது. தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமை வகித்தார். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்துக்கு பின்னர், கூடுதல் டிஜிபி சங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குற்றத் தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலில் ஆலோசிக்கப்பட்டது. குற்றங்களைத் தடுக்க, எந்த இடத்தில் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளன என்ற புள்ளி விவர தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பாளர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள். இவர்கள், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களின் மனுக்கள் மீதான நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்தல், அதில் தீர்வு காணப்படாவிட்டால், புதன்கிழமைகளில் நடத்தப்படும் மனுக்கள் முகாமில் மறுவிசாரணைக்கு மனு அளிக்க பரிந்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க வேண்டும். விபத்துகள் அதிகமாக ஏற்படும் இடங்களை பிளாக் ஸ்பாட்டுகளாக கண்டறிந்து அங்கு விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு ரோந்து முக்கியமானதாகும். கோவை மட்டுமின்றி, கோவை சரகத்தில் இரவு ரோந்தை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களி்ல காவலர்கள் சாலைகளில் இருப்பது தெரிந்தால், பொதுமக்கள் தைரியமாக பயணிப்பர். குற்ற சம்பவங்களும் நடக்காது.
இளைஞர்களிடையே போதைப் பொருள் பழக்கத்தை ஒழிக்க தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரிகளில் ஆன்ட்டி டிரக் கிளப் தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பொதுவாககூற வேண்டும் என்றால், காவல்துறையினருடைய பொதுமக்களுக்கான சேவையின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
துணை ஆணையர்கள் சந்தீஷ், மதிவாணன், சுகாஷினி, காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தி்ல் கலந்து கொண்டனர். முன்னதாக, நேற்று (ஏப்.6) இரவு முதல் அதிகாலை (ஏப்.07) வரை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களில் கூடுதல் டிஜிபி சங்கர் ரோந்துப் பணி மேற்கொண்டார்.