திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் முதல் மத்திய அரசு அலர்ட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.7, 2023

திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் முதல் மத்திய அரசு அலர்ட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.7, 2023
Updated on
3 min read

அதிகரிக்கும் கோவிட்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்: கோவிட் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது மன்சுக் மாண்டவியா கூறும்போது, ''கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கோவிட் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடப்படுவதையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கோவிட் பெருந்தொற்று காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த காலங்களில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதைப் போன்று செயல்பட வேண்டும்" என்றார்.

இதற்கிடையில், இந்தியாவில் வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 6,050 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28,303 - ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது புதன்கிழமை ஏற்பட்ட 5,335 பாதிப்பைவிட 13 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்பு முழுமையாக இருக்கிறது”: "தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 4000 கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை விரைவில் 11,000 பரிசோதனைகள் வரை உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கோவையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜனைப் பொருத்தவரை, 24 ஆயிரத்து 61 ஆக்சிஜன் கான்சென்டேட்டர்களும், 260 பிஎஸ்ஏ பிளாண்ட்களும், 2067 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் சேமிப்புத் திறன் கொண்ட அமைப்பும் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் நூறு சதவீதம் முழுமையாக இருக்கிறது” என்றார்.

இந்த நிலையில், புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதால் அச்சம் தேவையில்லை என்றபோதிலும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நுரையீரல் மருத்துவ நிபுணர் அறிவுறுத்தினார்.

ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி ஏப்.12-ல் ஆர்ப்பாட்டம்: சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் பேசிவரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வரும் 12-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்துக் கொண்டு இரட்டையாட்சி நடத்துவதற்கு பாஜக நினைத்து, அவர்களை மகிழ்விக்க தினமும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொதுவெளியில் உதிர்த்து வரும் ஆளுநரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில், வருகிற புதன் கிழமை அன்று மாலை 4 மணியளவில், ஆளுநர் மாளிகை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சட்டமன்ற மாண்பைக் குலைக்கும் நடவடிக்கைகளை ஆளுநர் நிறுத்தும் வரை நமது போராட்டம் ஓயாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழக ஆளுநர் அரசியல்வாதியைப் போன்று செயல்படுகிறார் என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

‘ஸ்டெர்லைட் பற்றி ஆளுநர் ரவி பேசியது வேதனை அளிக்கிறது’: “மக்களுடைய உணர்வுகளின் அடிப்படையில்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. உயர்ந்த பதவியில் உள்ள ஒரு தலைவர் அதைப்பற்றி பேசுவது வேதனை அளிக்கிறது” என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தொடர்பாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் ஏப்.28-க்குள் பள்ளி இறுதித் தேர்வு: தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகளை இம்மாதம் 28-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது. இதன்படி, எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத் தேர்வை 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு 17-ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்கள், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப தேர்வுகளை ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் காரணத்தால் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படும். அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

நெல்லை போலீஸ் அத்துமீறல் - விசாரணை அதிகாரியாக அமுதா: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய ஐடி விதிகளுக்கு சீதாராம் யெச்சூரி எதிர்ப்பு: தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 சட்டத்தில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள திருத்தம் பேச்சுரிமையின் மீதான நேரடி தாக்குதல் என்றும், ஜனநாயகத்தில் தணிக்கைக்கு இடமில்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். அதே போல் மத்திய அரசின் இந்தத் திருத்தம் குறித்து, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா தொந்தரவு அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

“நாடாளுமன்றத்தை சீர்குலைத்தவர்களை நாடு மன்னிக்காது”: ராகுல் காந்திக்காக நாடாளுமன்றத்தை சீர்குலைத்த எதிர்க்கட்சிகளை நாடு மன்னிக்காது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த ஆந்திர முன்னாள் முதல்வர்: ஆந்திரப் பிரதேசத்தின் முதல்வராக இருந்த கிரண் ரெட்டி வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தார். தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் கிரண் ரெட்டி. ராயலசீமா பகுதியைச் சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

பாகிஸ்தான் - ‘24 மணி நேரமும் கேஸ் விநியோகிக்க முடியாது’: எரிவாயு உற்பத்தி குறைந்துள்ளதால் 24 மணி நேரமும் தடையின்றி கேஸ் விநியோகம் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றும் இனி பணக்காரர்கள் கேஸ் விநியோகத்திற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் முஸ்டாக் மாலிக் தெரிவித்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in