மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களின் மறுகட்டமைப்பு பணிக்கு ரூ.73 கோடி நிதி ஒதுக்கீடு

மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களின் மறுகட்டமைப்பு பணிக்கு ரூ.73 கோடி நிதி ஒதுக்கீடு
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்திய அரசின் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் உள்ள திருச்செந்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி உட்பட 15 ரயில் நிலையகளின் மறுகட்டமைப்பு பணிக்கு ரூ.73.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் உள்ள சிறிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் "அம்ருத் பாரத் ஸ்டேஷன்" திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் அதிக வருவாய், பாரம்பரிய நகரங்கள், முக்கிய வழித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு கோட்டத்திற்கு 15 ரயில் நிலையங்கள் என மொத்தம் 1000 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இத்திட்டத்தில் மதுரை மண்டலத்தில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கோவில்பட்டி, பழனி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, பரமக்குடி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர், மணப்பாறை, சோழவந்தான் ஆகிய 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்த ரயில் நிலையங்களில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கடந்த மாதம் மதுரை மண்டல பொதுமேலாளர் பத்மநாபன் அனந்த், தெற்கு ரயில்வே முதன்மை பொறியாளர் மஸ்தான் ராவ், மண்டல வணிக பிரிவு மேலாளர் ரதிபிரியா, கதி சக்தி பிரிவின் துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மதுரை கோட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 ரயில் நிலையங்களில் முதற்கட்டமாக பயணிகள் வசதிக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.73.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அலங்கார முகப்பு, நுழைவு வளைவு ஏற்படுத்துதல், நடைபாதை, வாகன நிறுத்துமிடம், ரயில் நிலைய சாலை, காத்திருப்பு அறைகள், சுகாதார வளாகம், டிஜிட்டல் அறிவிப்பு பலகை, மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ரயில் நிலையத்தில் முதற்கட்ட மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.16.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் மத்திய அரசின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிக்கான "கதி சக்தி" திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in