

“நானும் டெல்டாகாரன்தான்; உறுதியாக இருப்பேன்” - ஸ்டாலின்: டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்தச் செய்தி வந்தபோது உங்களைப் போன்றுதான் நானும் அதிர்ச்சி அடைந்தேன். செய்தியைப் பார்த்த உடன் அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் நகலை அமைச்சரிடம் அளிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரிடம் கூறி இருக்கிறேன். நானும் டெல்டாகாரன் தான். உங்களைப் போன்று நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்காது” என்று கூறினார்.
“முதல்வர் கடிதம் எழுதுவதால் நிலக்கரி சுரங்கப் பிரச்சினை தீராது”: "நிலக்கரி சுரங்க விவகாரத்தை, திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதை விடுத்து கடிதம் எழுதுவது, அமைச்சரை சந்தித்தார் என்பதெல்லாம் வெறும் சாக்குபோக்கு சொல்வதுதான்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
கோயில் திருவிழாவில் நீரில் மூழ்கி 5 பேர் பலி: சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 அர்ச்சகர்கள் ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி உள்ளனர். சுவாமியை நீராட்டும் நிகழ்விற்காக இவர்கள் குளத்தில் இறங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிலர் தண்ணீரில் முழ்க அதில் 5 சடலங்கள் மீட்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், "தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்தத் தகவல் வந்தது. உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்வர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். முதல்வரின் சார்பில் 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.
இந்த நிலையில், கோயில் திருவிழாவின்போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி 11,000 கோவிட் பரிசோதனை: தமிழகத்தில் தினசரி 11 ஆயிரம் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதனிடையே, கரோனா அதிகரித்து வருவதால், பெரிய அளவில் பதற்றப்பட வேண்டியதில்லை. மாறாக கரோனா தொற்று ஏற்பட்டால் 5 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்று மருந்துகள் எடுத்துக் கொள்வது போன்ற வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்தியாவில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் புதிதாக 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 163 நாட்களுக்கு பிறகு கோவிட் பாதிப்பு 4,000 - ஐ கடந்திருக்கிறது.
சவரன் ரூ.45,000-ஐ கடந்த தங்கம் விலை: தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை முதன்முறையாக சவரன் ரூ.45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பலவீனமான பொருளாதார சூழல்களுக்கு மத்தியில் தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் மீதான முதலீடுகள் உயர தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ரூ.5,690-க்கும், சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.45,520-க்கும் விற்பனையானது.
அனுமன் ஜெயந்தி - மத்திய அரசு அறிவுறுத்தல்: நாடு முழுவதும் வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் வழிகாட்டுதலில் "மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமன் ஜெயந்தி விழா அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக, ராம நவமி திருவிழாவின்போது பிஹார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மாநிலங்களில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.
14 எதிர்க்கட்சிகளின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக 14 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுத்துவிட்டது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், பிஆர்எஸ், ஆர்ஜேடி, சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீத்பதி டி.ஒய்.சந்திரசூட் மனுவை நிராகரிக்கும் முன்னர் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். எதிர்க்கட்சிகள் மனுவின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் அதனை விசாரிப்பதற்கான சாத்தியம் குறித்தும் சந்தேகம் எழுப்பினார். அப்போது, எதிர்க்கட்சித் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியிடம், "விசாரணை, தண்டனைகளில் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு விலக்கு கேட்கிறீர்களா?. ஒருவேளை அரசியல்வாதிகளுக்கு சாமானியர்களைத் தாண்டி தனிச் சிறப்பான உரிமைகள் ஏதும் இருக்கிறது எனக் கருதுகிறீர்களா?" என்று கேட்டார்.
“அமெரிக்காவுக்கே இழுக்கு” - ட்ரம்ப்: ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அமெரிக்காவுக்கே இழுக்கு என்று தெரிவித்துள்ளார்.
அருணாச்சல் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்கா: அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இதில் ஒருதலைபட்சமான சீனாவின் நடவடிக்கையை அமெரிக்கா எதிர்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.
ஐ.நா அமைப்பில் பணிபுரிய ஆப்கன் பெண்களுக்கு தடை: ஆப்கானிஸ்தான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.