Published : 05 Apr 2023 01:15 PM
Last Updated : 05 Apr 2023 01:15 PM
சென்னை: டெல்டா மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெல்டா பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து காவிரி டெல்டா பகுதிகளை விலக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு வெளியிட்ட ஏல அறிவிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சி உறுப்பினர்கள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதற்குப் பதில் அளித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "டெல்டாவில் நிலக்கரி சுரங்க ஏல விவகாரத்தில் முதல்வர் வேகமாக செயல்பட்டு, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நிலக்கரி அமைச்சகத்திடம் வலியுறுத்திய அதிகாரிகளும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் எனக் கூறியுள்ளனர். தமிழக அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பதை திட்டவட்டமாக கூறுகிறோம்." என்றார்.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்த செய்தி வந்தபோது உங்களைப் போன்று தான் நானும் அதிர்ச்சி அடைந்தேன். செய்தியைப் பார்த்த உடன் அதிகாரிகளுடன் பேசி, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தின் நகலை அமைச்சரிடம் அளிக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரிடம் கூறி இருக்கிறேன். நானும் டெல்டாகாரன் தான். உங்களைப் போன்று நானும் உறுதியாக இருப்பேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு இதற்கு அனுமதி அளிக்காது." என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT