

புதுச்சேரி: புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. கடந்த காலங்களில் பெய்த மழையினால் இச்சாலை கடுமை யாக சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர். அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தன.
இதைத் தொடர்ந்து சாலையை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து இச் சாலையை சீரமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் புதுச்சேரி அரசு சார்பில் நிதி கோரப்பட்டது.
அதனை ஏற்ற மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நிதி வழங்க ஒப்புதல் அளித்த நிலையில், புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் மூலம் இந்திரா காந்தி சிலையில் இருந்து தவளக்குப்பம், முள்ளோடை பகுதி வரை உள்ள புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையை ரூ.17.98 கோடி மதிப்பில் மேம்படுத்திய சாலையாக அமைக்கவும், தேவையான இடங்களில் வாய்க்கால், சாலை பாதுகாப்பு உபகரணங்கள், தடுப் புச் சுவர் உள்ளிட்டவை அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தப் பணிக்கு கடந்தாண்டு செப்டம்பரில் பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால் மீண்டும் மழை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் என பல காரணங்களால் பணிகள் உடனடியாக தொடங்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே முதல் கட்டமாக ரூ.14 கோடி செலவில் புதுச்சேரி - கடலூர் சாலை மேம்படுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. ஒரு சில இடங்களில் வாய்க்கால்கள், தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. மேலும், புதிய தார் சாலை அமைக்கும் பணியும் தொடங்கி நடந்தது. முள்ளோடை எல்லை பகுதியில் இருந்து பிள்ளையார்குப்பம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை முழுமையாக புதிய தார் சாலை போடப்பட்டது.
ஆனால் இங்கிருந்து நோணாங்குப்பம் பாலம் இறக்கம் வரை சாலையின் நடுப்பகுதியில் மட்டும் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சாலையின் நடுவே போடப்பட்ட புதிய தார்சாலை உயர்த்தி போடப்பட்ட நிலையில், பழை சாலையின் உயரம் அதை விட தாழ்ந்து காணப்படுகிறது.
சாலையின் இருபுறமும் இதேபோல் இருப் பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. குறிப்பாக இரவில் மரண பயத்தில் சென்று வருகின்றனர்.
விபத்தை தடுக்கும் பொருட்டு நடுப்பகுதியில் மட்டும் போடப்பட்ட புதிய சாலையில் போக்குவரத்து போலீஸார் பேரல்கள், பேரிகார்டுகள் ஆகியவற்றை வைத்து இருவழி பாதைபோல் மாற்றி யுள்ளனர். அதே நேரத்தில் சாலை பணியை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக புதுச்சேரி பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, புதுச்சேரி - கடலூர் சாலை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர், மற்றொரு சாலை பணிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளார். அவர் தற்போது அந்த சாலை பணியில் ஈடுபட்டு முடித்துள்ளார். நாளை (இன்று) மீண்டும் புதுச்சேரி-கடலூர் பணி தொடங்கி முழுமையாக முடிக்கப்படும்” என்று தெரிவிக்கின்றனர்.