சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து 

அதிமுக அலுவலகம் | கோப்புப் படம்
அதிமுக அலுவலகம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலகட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது தலைமையில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை அதிமுக எதிர்கொள்ள இருக்கிறது.

இந்த தேர்தல் அவரது ஆளுமை மற்றும் தலைமைப் பண்பை மதிப்பிடும் காரணியாக உள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அதற்கு கட்சியை தயார்படுத்தும் விதமாக வரும் 7-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்த கருத்துகள், அதற்கு பழனிசாமி எதிர்வினையாற்றியது போன்றவற்றால் இரு கட்சிகளிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, கட்சி செயற்குழு கூட்டம், 7-ம் தேதி பகல் 12 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம் 7.4.2023 அன்று நடைபெறும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஒருசில காரணங்களால், 7.4.2023 - வெள்ளிக் கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in