

கொடைக்கானல்: கொடைக்கானல் நகராட்சியில் இலவச மற்றும் கட்டண கழிப்பறைகளில் உள்ள குறைகளை "க்யூ ஆர் கோட்" மூலம் புகார் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள பொது மற்றும் சமுதாய கழிப்பறை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், அக்கழிப்பறைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஒவ்வொரு கழிப்பறைக்கும் க்யூ ஆர் கோட் உருவாக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கழிப்பறைகளில் பொருத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 34 இலவச மற்றும் கட்டண கழிப்பறைகளில் க்யூ ஆர் கோட் ஒட்டப்பட்டுள்ளது. கழிப்பறையை பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, கழிப்பறை சுத்தமாகவும், பயன்பாட்டுக்கு உரியதாகவும் உள்ளதா? கைகளை கழுவுவதற்குரிய கிண்ணம் சுத்தமாகவும் மற்றும் பயன்பாட்டுக்குறியதாகவும் உள்ளதா?
தண்ணீர் வசதி உள்ளதா? கழிவறைகளில் துர்நாற்றம் உள்ளதா? கழிப்பறை கதவுகளில் தால்பால் சரியான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? என்பன போன்ற கருத்துக்களை (ஆம்/இல்லை) புகார் தொடர்பான புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்யலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள், கருத்துக்கள் மீது சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், வார விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் நகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் கழிப்பறை வசதி முதன்மையானது. க்யூ ஆர் கோட் மூலம் புகார் தெரிவிப்பதோடு, கழிப்பறை வசதி குறித்து 1 முதல் 5 வரை மதிப்பெண் வழங்கலாம்" என அதிகாரிகள் கூறினர்.