மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி - மெரினாவில் காந்தி சிலை இடமாற்றம்

சென்னை காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு அதன் பீடம் இடிக்கப்பட்டது.படம்: ம.பிரபு
சென்னை காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கிருந்த காந்தி சிலை அகற்றப்பட்டு அதன் பீடம் இடிக்கப்பட்டது.படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிக்காக, மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைதற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ பணி முடிந்ததும் அதே இடத்தில் மீண்டும் காந்தி சிலை நிறுவப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை ஒரு வழித்தடம் (26.1 கி.மீ.) ஆகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம்-கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதையாகவும், பூந்தமல்லி-பவர் ஹவுஸ் வரை உயர்மட்டபாதையாகவும் அமைய உள்ளது. உயர்மட்டபாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதேநேரத்தில், கலங்கரை விளக்கம் சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுரங்கப்பாதை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கட்டுமானத்தின் முந்தைய நடவடிக்கைகளுக்காக, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புகளை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைத்துள்ளது.

இந்நிலையில், மெட்ரோ ரயில் சுரங்க கட்டுமானப் பணிக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலை இடம் மாற்றப்பட்டுள்ளது.

சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் காந்தி சிலை அருகே நடைபெறுகின்றன. இங்குள்ள காந்தி சிலை சேதம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக, கடந்த ஒருமாதமாக காந்தி சிலை பாதுகாப்பாக இடம் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், காந்தி சிலை நேற்று அதிகாலை பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டது.

ராட்சத கிரேன் உதவியுடன் சிலை எடுத்துச் செல்லப்பட்டு, புதிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

காந்தி சிலை அமைந்திருந்த இடத்தில் இருந்து 25 மீட்டர் தொலைவில் காந்தி சிலை வைக்கப்படவுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நிறைவடைந்தபிறகு, காந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in