இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் முதல் பிரதமர் மோடி குற்றச்சாட்டு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.1, 2023

இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் முதல் பிரதமர் மோடி குற்றச்சாட்டு வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.1, 2023
Updated on
3 min read

இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை: இந்தியா - இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும், மாநில நெடுஞ்சாலைகளின் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

குடும்பங்களுக்கு குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை: குடும்பங்களுக்கு ரூ.100 கோடியில் குறைந்த விலையில் அதிவேக இணைய சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய பிறகு, ரூ.184 கோடியில் 20,000 அரசு அலுவலகங்கள் & நிறுவனங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

காவிரி - குண்டாறு இணைக்கப்படும்: அமைச்சர்: வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து அதிமுக சார்பில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட கவன தீர்ப்பு தீர்மானத்திற்கு அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது அவர், 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் காவிரி - குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்" என்று உறுதி அளித்தார்.

பரிசீலனையில் புதிய மாவட்டங்களுக்கான கோரிக்கை: தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்று சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிதி நிலைக்கு ஏற்ப முதல்வர் இது தொடர்பாக முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்தியா - மலேசியா இடையே ரூபாயில் வர்த்தகம்: இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தகம் இந்திய ரூபாயில் நடக்கும். அதேநேரத்தில், இதற்கு முன்பு இருந்த நாணய பரிவர்த்தனை முறையும் தொடரும். இந்திய ரூபாய் மூலம் சர்வதேச பணபரிவர்த்தனை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஜூலையில் இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் வரை இயல்பைவிட அதிக வெப்பம் நிலவும்: இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இம்மாதம் முதல் ஜூன் வரையிலான கோடைக்காலத்தில் இயல்பைவிட அதிக வெப்பநிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா, ''பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், மகாராஷ்ட்டிரா, குஜராத், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெப்ப அலைகள் வீசும் நாட்களின் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தென்னிந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் சில வடமேற்கு இந்தியப் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பொதுவாக இந்தக் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகரித்தே காணப்படும். அதேநேரத்தில், தென்னிந்திய தீபகற்ப பகுதிகளிலும், வடமேற்கு பகுதிகளிலும் வெப்பம் வழக்கமான அளவிலோ அல்லது வழக்கத்தைவிட குறைவான அளவிலோ இருக்கக்கூடும்" என்றார்.

100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அங்கன்வாடிகள்: மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி, பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அதில், ''நாடு முழுவதும் இந்த ஆண்டு 27 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதில், சுமார் 20 ஆயிரம் மையங்கள் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்படும். ஒவ்வொரு அங்கன்வாடியும் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்படும். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.4 லட்சம் தொகையை மத்திய-மாநில அரசுகள் சமமாக வழங்கும் என்று தெரிவித்துள்ளது.

எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர் முயற்சி பிரமதர் மோடி: உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் தொடர்ந்து முயன்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “நமது நாட்டில் சிலர் இருக்கிறார்கள். கடந்த 2014-க்குப் பிறகு பிரதமர் மோடியின் நற்பெயருக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் களங்கம் விளைக்க தொடர்ந்து முயன்று வருகின்றனர். இதை அப்பட்டமாகவே அவர்கள் செய்கிறார்கள். அவர்களுக்கு உதவ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், தற்போது ஒவ்வொரு இந்தியனும் மோடிக்கு பாதுகாப்பு கவசமாக மாறி இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் ஜெய் பாரத் பேரணி மேற்கொள்ளும் ராகுல் காந்தி: சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகாவில் 'ஜெய் பாரத்' பேரணியை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி. வரும் 9ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் ராகுல் காந்தி இந்தப் பேரணியை மேற்கொள்கிறார். எம்.பி தகுதி இழப்புக்கு ஆளான பின்னர் அவர் கலந்து கொள்ளும் முதல் பேரணி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரிப்பு’: தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 27 முதல் மார்ச் 26 - 2023 காலகட்டத்திற்கான கரோனா பரவல் புள்ளிவிவரத்தை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்காசிய பிராந்தியத்தில் விகிதாச்சார அடிப்படையில் இந்தியாவில் கரோனா அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18,130 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதாவது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.3 புதிய தொற்றுகள் என்ற விகிதாச்சாரத்தில் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in