Published : 01 Apr 2023 01:11 PM
Last Updated : 01 Apr 2023 01:11 PM

2023-ல் 75% அங்கன்வாடிகள் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கட்டப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: நடப்பாண்டில் கட்டப்படும் புதிய அங்கன்வாடி மையங்களில் 75%, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், கல்வி, பெண்கள், இளைஞர்கள், விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்திருக்கிறது. அதில், ''நாடு முழுவதும் இந்த ஆண்டு 27 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது. இதில், சுமார் 20 ஆயிரம் மையங்கள் 100 நாள் வேலை திட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்படும்.

ஒவ்வொரு அங்கன்வாடியும் ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்படும். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.4 லட்சம் தொகையை மத்திய-மாநில அரசுகள் சமமாக வழங்கும். அதோடு, நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 40 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் இந்த ஆண்டு மேம்படுத்தப்பட உள்ளன.

சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.O ஆகிய திட்டங்களின் கீழ் அங்கன்வாடிகளை மேம்படுத்த மாநில அரசுகள் தாங்களாகவே சிஎஸ்ஆர் நிதியைப் பெறலாம். அதேநேரத்தில், பிரதிபலன் எதிர்பார்க்காமல் நிதி வழங்குபவர்களிடம் இருந்து மட்டுமே நிதி உதவியை பெறலாம்.

அங்கன்வாடிகளில் கழிப்பறை வசதி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மேசை, நாற்காலி போன்ற தளவாடங்கள், சமையல் பாத்திரங்கள், சமையலறைக்குத் தேவையான பொருட்கள் வாங்குவது போன்றவற்றுக்காக இந்த நிதியைப் பயன்படுத்தலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x