

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சொத்து வரி உயர்த்தியதாக எம்எல்ஏ தங்க பாண்டியன் மீது முன்னாள் எம்.பி. லிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ரவி வரவேற்றார். ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும். ரயில்வே மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தாமிரபரணி கூட்டுக் குழு நீர் திட்டம் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி லிங்கம் பேசுகையில், "கடந்த காலங்களில் ராஜபாளையம் மற்ற நகராட்சிகளுக்கு முன் மாதிரியாக திகழ்ந்தது. தற்போது தமிழகத்தில் எந்த மாநகராட்சி, நகராட்சிகளில் இல்லாத அளவுக்கு ராஜபாளையத்தில் சொத்து வரி விகிதம் அதிகமாக உள்ளது. ராஜபாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் ஊராட்சி பகுதிகளுக்கு புலம் பெயர் வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. ராஜபாளையம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் எம்எல்ஏ தங்கப் பாண்டியன் சொத்து வரியை உயர்த்த வலியுறுத்தியுள்ளார். சொத்து வரி உயர்வை குறைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முன்னாள் எம்.பி லிங்கம் கூறியுள்ளார்.