

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
பழனிசாமி தரப்பினரின் ஏற்பாட்டில் அதிமுக பொதுக்குழு கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்டது. இதில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்துவிட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான பி.எச்.மனோஜ்பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகளில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் ஓபிஎஸ் தரப்பில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை கடந்த 19-ம் தேதி அவசர வழக்காக விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ்பாபு, ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். ஆனால், முடிவு அறிவிக்க கூடாது’’ என்று உத்தரவிட்டிருந்தார். பிறகு, இந்த வழக்கை விடுமுறை நாளான கடந்த 22-ம் தேதி சிறப்பு விசாரணையாக, 7 மணி நேரத்துக்கு மேல் விசாரித்தார்.
ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர், ஸ்ரீராம், அப்துல்சலீம் உள்ளிட்டோரும், இபிஎஸ் மற்றும் அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.
வைத்தியநாதன், விஜய் நாராயண் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ்பாபு நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பு: மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,460 பேரின் ஆதரவுடன் இந்த தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனவே, கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும், எனவே இந்த தீர்மானங்கள் செல்லாது எனவும் ஓபிஎஸ் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க முடியாது.
அதேநேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம் செல்லுமா, செல்லாதா என்பதை பிரதான வழக்கில்தான் தீர்மானிக்க முடியும். அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் 7 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ்
தரப்பட வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க முடியாது.
அதேபோல, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை, பாதிப்பை ஏற்படுத்திவிடும்
என்பதால் அதற்கும் தடை விதிக்க முடியாது. எனவே, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகம் வந்த பழனிசாமி, அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், கையெழுத்திட்டு பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.