Published : 27 Mar 2023 04:56 PM
Last Updated : 27 Mar 2023 04:56 PM

சென்னை சாலையோரங்களில் வாகனம் நிறுத்தினால் கட்டணம்: மாநகராட்சி பட்ஜெட் 2023-ல் முழு விவரம்

சாலையோர வாகன நிறுத்தம் | கோப்புப் படம்

சென்னை : சென்னையின் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தி.நகரில் பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். இதனைத் தவிர்த்து சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக 17 சாலைகளில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்தத் திட்டம் செயல்பட தொடங்கியது. சென்னை அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட 17 சாலைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த இடங்களில் மொத்தம் 5,532 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்களில், 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கும், மீதம் உள்ள இடங்கள் நான்கு சக்கர வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியில் மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்து, அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் பார்த்து அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், காலப்பேக்கில் இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கரோனா தொற்று மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் திட்டமிட்ட வருவாயை ஈட்ட முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், இந்தத் திட்டம் அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் விவரம்: சென்னை பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை மிகப்பெரும் சிக்கலாக உள்ளது. இதற்கு தீர்வு செய்யும் பொருட்டு, போக்குவரத்து காவல் துறை, திட்டமிடல் ஆணையம், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (CMDA) மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் இது தொடர்பான திட்டமிடல் மற்றும் பொறியியல் கண்ணோட்டத்தில் வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க தற்போது, தனியாக எந்த ஒரு அமைப்பும் இல்லை. சென்னை மாநகராட்சியில் On-Street Parking திட்டம் சென்னை மாநகராட்சியின் சிறப்புத் திட்டங்கள் துறையாலும் மற்றும் வருவாய் சேகரிப்பு (Revenue Collection) வருவாய்த் துறையாலும் கண்காணிக்கப்படுகிறது.

2023 – 2024-ஆம் நிதியாண்டில் வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க, பெருநகர சென்னை மாநகராட்சியில் கீழ்கண்டுள்ளவாறு அலுவலர்கள் அடங்கிய ஒரு பிரத்யேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும். இக்குழு வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.

சென்னை மாநகராட்சியில் முக்கிய வணிகப் பகுதிகளில் உள்ள சாலை ஓரங்களில் வாகன நிறுத்த மேலாண்மையை, முன்னதாக தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகம் லிமிடெட் (TEXCO) மூலம் நிர்வகிக்கப்பட்டது. பின்னர் 2017-18ம் ஆண்டில் வருவாய் பகிர்வு அடிப்படையில், பொது தனியார் கூட்டு முறையில், தெரு வாகன நிறுத்த மேலாண்மையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, இதன் மூலம் தினசரி ரூ.5,000/-லிருந்து, கிட்டத்தட்ட ரூ.1.20 இலட்சமாக வருவாய் ஈட்டப்பட்டது.

தற்போது தனியார் நிறுவனத்தால் 8, 9 & 10 ஆகிய மண்டலங்களில் சுமார் 5,000 வாகனங்கள் மேலாண்மை செய்யப்படுகிறது. வருவாயை மேலும் ஈட்டுவதற்கும், சாலை ஓரங்களில் வாகன நிறுத்த மேலாண்மையை, மேலும் மேம்படுத்தும் வகையில், 2023-2024ஆம் நிதியாண்டில் மீதமுள்ள மண்டலங்களிலும் பொது தனியார் கூட்டு (PPP) முறையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசிக்க | சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023 - நிதி பற்றாக்குறை ரூ.334 கோடி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x