Published : 27 Mar 2023 07:03 AM
Last Updated : 27 Mar 2023 07:03 AM
சென்னை: போக்குவரத்துத் துறையை கண்டித்து தலைமைச் செயலகத்தை நோக்கி வரும் 29-ம் தேதி வாகனப் பேரணி நடத்தப்படும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உரிமைக் குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம்தலைவிரித்தாடுகிறது. போக்குவரத்து உரிமம் புதுப்பிக்க அரசுக் கட்டணத்தை மட்டும் செலுத்தி,வட்டாரப் போக்குவரத்து அலுவலரை அணுகினால், ஓட்டுநர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதுவே இடைத்தரகர்கள் மூலம் அணுகினால், 2 நாட்களில் பணி முடித்துக் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை.
மேலும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும், சட்டத்துக்குப் புறம்பான பைக் டாக்சிகளால், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டப்படி, கடும் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.
தலைமை செயலகம் நோக்கி: சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவதால், அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எங்களது கோரிக்கைகள் மீதுநடவடிக்கை எடுக்காததால், போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை நடைபெறும் மார்ச் 29-ம்தேதி, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து, ஆட்டோ, கால்டாக்சி மற்றும் சரக்கு வாகனங்களுடன் அனைத்துஓட்டுநர் சங்கங்களையும் ஒன்றிணைத்து, தலைமைச் செயலகத்தை நோக்கி வாகனப் பேரணிநடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT