Last Updated : 26 Mar, 2023 06:40 PM

1  

Published : 26 Mar 2023 06:40 PM
Last Updated : 26 Mar 2023 06:40 PM

மதுரையில் நடைபெற்று வரும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் - அடுத்த மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை

மதுரை: அடுத்த மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவை தொடங்கும் என்றும் இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள முக்கிய விமான நிலையங்களில் மதுரையும் ஒன்று. குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் வர்த்தகர்கள், அரசியல் வாதிகள், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவசர தேவை கருதி இந்த விமான நிலையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற ஓரிரு மாவட்டத்தினர் மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இவர்களும் அவ்வப்போது, சொந்த ஊருக்கு வந்து திரும்புவதால் அவர்களுக்கு மதுரை விமான நிலையம் பயனுள்ளதாக இருக்கிறது.

வெளிநாடு, மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரும் மதுரை மீனாட்சி அம்மன், அழகர் கோயில், ராமேசுவரம் போன்ற கோயில்களுக்கு தரிசனத்துக்கு வருவோரும் விமானங்களை பயன்படுத்தும் சூழலால் மதுரை விமான நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றால் விமான நிலைய விரிவாக்கம், மேம்பாடு அவசியம் என, பல்வேறு தரப்பிலும், தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில், அதற்கான விரிவாக்கம் பணிகளும் நடக்கின்றன. விரிவாகத்திற்கென புதிதாக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் ரூ.35 கோடியில் சுற்றுச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. மேலும், விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ரூ. 75 கோடியில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் பணியும் நடக்கிறது.

இதற்கிடையில் அடுத்த மாதம் முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து விமான நிலைய உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''மதுரை விமான நிலையத்தில் இருந்து ஏப்ரல் முதல் 24 மணி நேரமும் விமான சேவை செயல்படுத்தப்படும்.

இதற்கு தேவையான மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தேர்ந்தெடுக்கப்படுவர். ஏற்கெனவே சுமார் 40க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விமான நிலைய வெளிப் பகுதியில் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதன்மூலம் மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வருவாயும் கூடும்'' என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x