Published : 25 Mar 2023 06:00 AM
Last Updated : 25 Mar 2023 06:00 AM
ஆற்காடு: கலவை அருகே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலத்துக்கான இருவரின் பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்யக்கோரி விவசாயி செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி என்பவரின் மகன் கார்த்திக் (34), விவசாயி. இந்நிலையில், அதே பகுதியில் கடந்த 1983-ம் ஆண்டு அரசு புறம்போக்கு நிலத்தை நிலம் இல்லாத மற்ற பகுதிகளைச் சேர்ந்த 12 பேருக்கு பட்டாவை அரசு வழங்கியுள்ளது.
இதில், 10 பேர் தங்கள் இடத்தை மற்றவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள பாலசுப்பிரமணியம் மற்றும் சின்னப்பாமந்திரி ஆகியோர் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள மொத்தம் 5 ஏக்கர் 65 சென்ட் நிலம் பட்டா இடத்தை அவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலத்தின் ஒரு பகுதியை, பொதுமக்களும், கோயில் மற்றும் மண்புழு தயாரிக்கும் இடம், மயானத்துக்கு சாலை ஆகியவற்றுக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே, அவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பட்டா இடத்தை விற்பனை செய்ய வந்தபோது, அரசுக்கு சொந்தமான நெற்களம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலத்தை மீட்டு தர வேண்டுமென வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எதிர்த்து கார்த்திக் உறவினரான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான மாசிலாமணி மனுதக்கால் செய்தார்.
இதில், நீதிமன்றம் ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு விடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் பொன்னமங்கலம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை தனக்கு சாதகமாக வரவில்லை என கார்த்திக்கு தெரியவந்தது. இதனால், கார்த்திக், அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக்கோரியும், அந்த இடத்தில் அரசு கட்டிடங்கள் கட்டவேண்டுமென வலியுறுத்தியும் நேற்று மாலை 4.30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள 110 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவலறிந்த கலவை வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் ஆய்வாளர் டீக்காராமன் ஆகியோர் வந்து கைப்பேசி மூலமாக கார்த்திக்கை தொடர்புக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடை பெற்றது. பிறகு டவரில் நின்றிருந்த கார்த்திக்கு அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகளிடம் கைப்பேசியில் தெரிவித்தார். உடனடியாக, அவரை தீயணைப்பு துறையினர் மீட்டு கீழே அழைத்து வந்தனர். இதுகுறித்து வாழப்பந்தல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT