தமிழக வேளாண் பட்ஜெட் முதல் ராகுல் காந்தி கடிதம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 21, 2023

தமிழக வேளாண் பட்ஜெட் முதல் ராகுல் காந்தி கடிதம் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 21, 2023
Updated on
3 min read

தமிழக வேளாண் பட்ஜெட் - முக்கிய அம்சங்கள்: தமிழக வேளாண் பட்ஜெட் 2023 - 2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை எடுத்துக் கூறினார். இந்த வேளாண் பட்ஜெட்டில் கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும், காவிரி டெல்டாவில் ரூ.1,000 கோடி செலவில் வேளாண் தொழில் பெருந்தடம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ரூ.82 கோடியில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்: ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.82 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். 50 ஆயிரம் ஏக்கரில் சிறு தானிய சாகுடி செய்யப்படும். சிறு தானிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தி உற்பத்தியை உயர்த்த நிதி, நம்மாழ்வார் பெயரில் விருது: பருத்தி உற்பத்தியை உயர்த்தும் வகையில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அங்கக வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரூ.5 லட்ச பணமும், பாராட்டு பத்திரமும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை ஏமாற்றிய வேளாண் பட்ஜெட்: இபிஎஸ்: "பல துறைகளைச் சேர்த்து 2 மணி நேர பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து உள்ளார். ஆனால் வேளாண் பெருமக்களுக்கு முக்கியமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் இதில் இல்லை. கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் வெறும் ரூ.195 தான் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய ஏமாற்று வேலை. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக இந்த வேளாண்மை பட்ஜெட் உள்ளது" என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

"காவிரி பாசன மாவட்டங்களில் திருச்சி - நாகை இடையே வேளாண் தொழில் பெருவழித்தடம் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.1000 கோடியில் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், அந்தத் திட்டத்திற்கு நடப்பாண்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இத்திட்டத்திற்கான அறிவிப்பு தான் வெளியாகிறதே தவிர நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கரோனா பாதிப்பு குறித்து பதற்றம் தேவையில்லை: அமைச்சர்: "கடந்த 2, 3 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செய்யப்படும் இரண்டு சதவீத ரேண்டம் பரிசோதனையில் பாதிப்பு எண்ணிக்கை 6-7 என்ற வகையில் உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பு என்பதும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்த்து பெரிய அளவில் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்று" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அமளிக்கு இடையே ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் நிறைவேற்றம்: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023 -2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளிகளால் செவ்வாய்க்கிழமையும் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்: தன்னைக் களங்கப்படுத்தும் மத்திய அரசின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மக்களவையில் பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

வாசிம் அக்ரமின் ‘உலகக் கோப்பை’ விருப்பம்: இந்தியா முதன்முறையாக 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் அனைத்தையும் தனித்தே நடத்துகின்றது. இதற்கு முன்பு 1987, 1996 மற்றும் 2011 உலகக் கோப்பைப் போட்டிகளை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசத்துடன் சேர்ந்து நடத்தி இருக்கிறது. இப்போது இந்தியா தனித்து நடத்துவதால், இந்த உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்வது சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் பவுலர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

ஆஸ்கர் வென்ற இயக்குநரை கவுரவித்த தமிழக அரசு: சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘ தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆஸ்கர் விருது வென்றது. இதன் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திகி, “ஒரு பெண்ணாக தாய் தமிழ்நாட்டிற்காக ஆஸ்கர் விருதை பெற்றுக்கொடுத்ததை மிகவும் பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

உலகின் மகிழ்ச்சியான நாடு: 126-வது இடத்தில் இந்தியா!: ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் எந்த அளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்; அதற்கான சூழல் எந்த அளவு இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப்படுத்தி அதனை அறிக்கையாக ஐ.நா. வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வெளியான அதன் அறிக்கையில், மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையும், அதற்கான காரணங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, ஐரோப்பிய நாடான பின்லாந்து தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 15-வது இடத்தையும், இங்கிலாந்து 19-வது இடத்தையும் பிடித்துள்ளன. பட்டியலில் சீனா 64-வது இடத்திலும், நேபாளம் 78-வது பாகிஸ்தான் 108-வது இடத்திலும், இலங்கை 112-வது இடத்திலும் இருக்க, இந்தியா 126வது இடத்தில் இருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in