Published : 21 Mar 2023 04:24 PM
Last Updated : 21 Mar 2023 04:24 PM

கரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பதற்றம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: "கடந்த 2, 3 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செய்யப்படும் இரண்டு சதவீத ரேண்டம் பரிசோதனையில் பாதிப்பு எண்ணிக்கை 6-7 என்ற வகையில் உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பு என்பதும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்த்து பெரிய அளவில் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும், அதிகரித்துக் கொண்டிருக்கிற இந்த கரோனா வகையானது XBT, BA2 என்ற வகையிலான உருமாற்றம் பெற்ற வைரஸ் பாதிப்புகள்தான். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பும் இல்லாத நிலையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செல்லாத நிலையும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2, 3 நாட்களாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு செய்யப்படும் இரண்டு சதவீத ரேண்டம் பரிசோதனையில் பாதிப்பு எண்ணிக்கை 6-7 என்ற வகையில் உயர்ந்துள்ளது. மேலும், கரோனா பாதிப்பு என்பதும் கூடுதலாகிக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையைப் பார்த்து பெரிய அளவில் பதற்றம் அடைய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இந்த பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமான ஒன்று" என்று அவர் கூறினார்.

அப்போது அவரிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நேற்று முன்தினம் அவருடைய மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு கரோனா பாதிப்பு இருந்திருக்கிறது. அது இந்த ஒமைக்ரான் பாதிப்பின் ஒருவகைதான். இதனால் அவரை, கரோனா வார்டிற்குள் அனுமதித்து வைத்துள்ளனர். எனவே, அவர் நலமுடன் இருக்கிறார். நேற்றுகூட அனைவரிடமும் பேசினார்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x