“ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் சூட்டுவதால் நீட் பிரச்சினை முடிந்துவிடுமா?” - பிரேமலதா கேள்வி

பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
பிரேமலதா விஜயகாந்த் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுக்கோட்டை: "அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அரசு நினைக்கிறது. இது நிச்சயமாக கண்டனத்துக்குரிய விஷயம்" என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், ஆவின் பால் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர், பால் தொடர்பான விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அதை விடுத்து அடுத்தவர் மீது குறை சொல்வது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்" என்றார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "அரியலூரில் ஒரு கட்டிடத்துக்கு அனிதாவின் பெயர் வைத்துவிட்டதால், நீட் தேர்வு தொடர்பான பிரச்சினை முடிந்துவிட்டது என்று அவர்கள் நினைக்கிறார்கள். இது நிச்சயமாக கண்டனத்திற்குரிய விஷயம். ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், ஒரு பெயரை சூட்டிவிட வேண்டியது, ஒரு சிலையைத் திறந்துவிட வேண்டியது. இதுபோல் செய்தால் அத்துடன் அந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 22 கோடி ரூபாய் செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in