

சென்னை: ரூ.1500 கோடி சொத்து வரி வசூல் என்ற இலக்கை அடைய அடுத்த 15 நாட்களில் மாநகராட்சி வருவாய்த் துறை பணியாளர்களுக்கு தினசரி வார்டுக்கு 100 பில் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது சொத்து வரி மற்றும் தொழில் வரியாகும். சென்னையில் உள்ள 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, அரையாண்டுக்கு தலா 750 கோடி ரூபாய் என 1,500 கோடி ரூபாய் வரை வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்துவோருக்கு, ஐந்து சதவீதம் அல்லது 5,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதற்குப் பின், சொத்து வரி செலுத்துவோருக்கு, இரண்டு சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது. இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டாதால், தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்துவதற்கு, ஜனவரி 12 வரை மாநகராட்சி அவகாசம் அளித்துள்ளது.
ஆனாலும், பெரும்பாலான சொத்து உரிமையாளர்கள், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இவ்வாறு சொத்து வரி செலுத்தாதோர் குறித்த பட்டியலை, மாநகராட்சி https://chennaicorporation.gov.in/gcc/propertytax_revision என்ற இணையதளத்தில் வெளியிட்டு வந்தது. மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிதியாண்டு நிறைவு பெற இன்னும் 15 நாட்களே உள்ள காரணத்தால் சொத்து வசூலை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்த ஆய்வு கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் நேற்று முன்தினம் (மார்ச் 16) நடைபெற்றது. இதில் மாநகர வருவாய் அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூலிப்பவர்கள், வரி கணக்கீட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் உயர் அதிகாரிகள் பேசுகையில், "சென்னை மாநகராட்சியில் இந்தாண்டு ரூ.1500 கோடி சொத்து வரி வசூலிக்க வேண்டும். தற்போது வரை ரூ.1380 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 13.31 லட்சம் சொத்து உரிமையாளர்களில் 8.50 லட்சம் பேர் வரி செலுத்தியுள்ளனர். இன்னும் 5 லட்சம் பேர் செலுத்தவில்லை. சென்னைக்கு சொத்து வரி வருவாய் மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி வசூலில் சென்னை முதலிடம் பிடிக்க வேண்டும். தற்போது வரை நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். இனி வரும் இந்த 15 நாட்களும் நீங்கள் கொஞ்சம் அதிகமாக பணியாற்ற வேண்டும்" என்றார்.
சொத்து வரி வசூல் குறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "தற்போது வரை 5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தவில்லை. எனவே அடுத்த 15 நாட்களில் தீவிரமாக சொத்து வரி வசூல் செய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு வார்டுக்கு தினசரி 100 பில்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அனைத்து வரி வசூலிப்பவர்களும் அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.