மதுரையில் போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: போதிய காவலர்களுடன் மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுமா?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மாநகரில் தல்லாகுளம், மதுரை நகர், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இக்காவல் நிலையங்களுக்கு ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 புகார் மனுக்கள் வருகின்றன. இது தவிர, காவல் ஆணையரகத்தில் உதவி ஆணையர் தலைமையில் செயல்படும் வரதட்சிணை தடுப்பு சிறப்பு பிரிவிற்கும் 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. இதற்கிடையில், மகளிர் போலீஸார் பற்றாக்குறை இருப்பதால் உரிய நேரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமம் இருப்பதாக புகார் எழுகிறது.

சிறப்பு பணி, ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் பாதுகாப்பு பணிக்கு இடையிலும் புகார்களை விசாரிக்கின்றனர். உதவி ஆணையர் மகேஷ் தலைமையிலான சிறப்பு பிரிவில் பல்வேறு வழக்குகளை விசாரிக்கப்பட்டுபாதிக்கப் பட்டோருக்கு 500 பவுனுக்கு மேல் நகைகள் பெற்று தரப்பட்டுள்ளன.

இதனிடையே சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களில் வெட்டு, குத்து, கொலை, கஞ்சா, அடிதடி பிரச்சினைகளுக்கான புகார்கள் மட்டும் வரும் நிலையில், குடும்பப் பிரச்னை தொடர்பாக பல தரப்பட்ட புகார்களும், பாலியல் தொடர்பான ‘ போக்சோ’ குறித்த புகார்களும் மகளிர் காவல் நிலையங்களுக்கு அதிகமாக வருவதால் போதிய எண்ணிக்கையில் போலீஸார், அதிகாரிகள் இருக்கும் அவசிய சூழல் ஏற்பட்டுள்ளது என அப்பிரிவு போலீஸார் கூறுகின்றனர்.

மேலும், மகளிர் போலீஸார் கூறுகையில், “கடந்த ஆண்டில் 66 ‘போக்சோ’ வழக்குகளும், கடந்த 3 மாதத்தில் மட்டும் 8 வழக்கும் மாநகரில் பதிவாகியுள்ளன. இவ்வழக்குகள் சட்டம், ஒழுங்கு காவல் நிலையத்தில் பதிவு செய்தாலும், மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மகளிர் போலீஸாரே கையாளவேண்டியுள்ளது. வரதட்சிணை, கணவன் - மனைவி பிரச்சினை போன்ற குடும்ப விவகாரம் குறித்த புகார்களையும் விசாரிக்க வேண்டும். இங்கு பெரும்பாலும் வழக்கு பதிவு என்பதை விட, சுமுக தீர்வு காணவேண்டும் என்ற அடிப்படையிலேயே விசாரிக்கவேண்டும். இதனால் போலீஸ் , அதிகாரிகள் எண்ணிக்கை அவசியமாகிறது.

தற்போது, தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் 5 எஸ்ஐக்களுக்கு பதில் ஒருவரும், தெற்குவாசல் மகளிரில் 4 பேருக்கு 2 பேரும், மதுரை நகர் மகளிர் காவல் நிலையத்தில் 3-க்கு ஒருவரும், திருப்பரங்குன்றத்தில் 5-க்கு ஒரு எஸ்ஐயும் என பணி புரிகின்றனர். தல்லாகுளம், மதுரை நகர் மகளிர் காவல் நிலைய எல்லைகள் விரிவாக்கம் செய்த நிலையிலும், இன்னும் அதே எண்ணிக்கை தொடருகிறது.

தல்லாகுளத்தை அண்ணாநகரை மையமாக வைத்து புதிய மகளிர் காவல் நிலையம் உருவாக்கும் அளவுக்கு புகார்கள் குவிக்கின்றன. ஏற்கெனவே இக்காவல் நிலையம் இட பற்றாக்குறையிலும் சிக்கி தவிக்கிறது. ஓரிரு மகளிர் காவல் ஆய்வாளர் , எஸ்ஐக்கள் மகளிர் காவல் நிலையங்களில் பணிபுரிவதில் தயங்கி, மாறுதல் கேட்டு செல்லும் சூழலும் உள்ளது. இது பற்றி காவல் ஆணையர், அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக இல்லாவிடினும் ஓரளவு எண்ணிக்கையில் செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in