

நாடாளுமன்ற முடக்கம் நீடிப்பு: அதானி விவகாரம், ராகுலின் லண்டன் பேச்சு தொடர்பாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி, முழக்கங்கள் காரணமாக நான்காவது நாளாக வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முற்றிலும் முடங்கின.
இதனிடையே, மதியம் நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "நான் இந்தியாவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால், நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொல்வேன். ஆனால், நான் பேசினால் அதை பாஜக விரும்பாது” என்று தெரிவித்தார்.
“மனச்சோர்வால் பேசும் நிலையில் இல்லை” - திருச்சி சிவா: “நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால், நான் பேசும் மனநிலையில் இல்லை. நான் மிகுந்த மனச்சோர்வில் உள்ளேன்” என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறினார். முன்னதாக, திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு, எம்.பி. திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் புதன்கிழமை கருப்புக்கொடி காட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, திமுக நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், டெல்லியில் இருந்து வியாழக்கிழமை திருச்சி வந்த சிவா, செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.
திருச்சி சம்பவம்: முதல்வர் மீது இபிஎஸ் விமர்சனம்: திருச்சி சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “காவல் துறையை தன் கைவசம் வைத்துள்ள இந்த அரசின் முதல்வர், காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி ஒடுக்காமல், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்தியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிளஸ் 2 மாணவர்கள் ஆப்சென்ட்: அமைச்சர் விளக்கம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 பேர் எழுதவில்லை. இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "எதனால் இவ்வளவு ஆப்சென்ட், கடந்த முறை இது போன்ற நிலை வந்தபோது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டது. தேர்வு மையம் வாரியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுக்கு வராதவர்கள் தொடர்பான தகவலை எடுத்து அதற்கான காரணத்தை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை: அமைச்சர் விளக்கம்: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ஏப்ரல் 17-ம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததால், கட்சியிலிருந்து 6 மாத தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடக் கூடாது. இதுபோல நீங்கள் செய்தால். எங்களுக்கும் இதுபோல பல வித்தைகள் தெரியும். நாங்களும் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை உருவாக்கம்: புதுச்சேரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை புதிதாக உருவாக்கப்பட்டு அதற்கு ரூ. 530 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டின் பெருமை” - அஸ்வினை புகழ்ந்த உதயநிதி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பவுலிங் தரவரிசையில் முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். “தமிழ்நாட்டின் பெருமை” என அஸ்வினை புகழ்ந்துள்ளார் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு: டெல்லியின் முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா மீது அம்மாநில அரசின் கருத்து பிரிவு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு புதிய ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் கருத்து பிரிவால் அரசு கருவூலத்திற்கு ரூ.36 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லேசான காய்ச்சல் நல்லதுதான்: ஆய்வு: மருந்துகளைவிட வேகமாக தொற்றுகளை அழிப்பதற்கு லேசான காய்ச்சல் உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மருத்துவ ஆய்வு இதழான Immunology and Inflammation-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மிதமான காய்ச்சலானது உடலில் உள்ள நோய்த் தொற்றை விரைவாக அழிக்க உதவுகிறது. திசுக்கள் சேதமடைவதை சரி செய்கிறது. மருந்துகள் மூலம் கிடைக்கும் பலன்களைவிட விரைவான பலன்களை லேசான காய்ச்சல் வழங்குகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.
மேலும், லேசான காய்ச்சல் என்பது உடல் தன்னைத் தானே சரி செய்வதன் வெளிப்பாடு. உடலில் ஏற்படும் பிரச்சினைகளை மருந்து இன்றி சரி செய்வதற்கான வேலையை உடல் செய்கிறது. எனவே, லேசான காய்ச்சல் என்பது நம் உடலுக்கு நல்லது. முதலில் ஏற்படும் லேசான காய்ச்சலை குணப்படுத்திக்கொள்வதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த ஆய்வின் முடிவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.