தொற்றுகளை வேகமாக அழிக்க லேசான காய்ச்சல் உதவுகிறது: ஆய்வு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மருந்துகளைவிட வேகமாக தொற்றுகளை அழிப்பதற்கு லேசான காய்ச்சல் உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, மருத்துவ ஆய்வு இதழான Immunology and Inflammation-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: மிதமான காய்ச்சலானது உடலில் உள்ள நோய்த் தொற்றை விரைவாக அழிக்க உதவுகிறது. திசுக்கள் சேதமடைவதை சரி செய்கிறது. மருந்துகள் மூலம் கிடைக்கும் பலன்களைவிட விரைவான பலன்களை லேசான காய்ச்சல் வழங்குகிறது. விலங்குகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.

கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சியாளரான டேனியல் பர்ரெடா, ''நமது உடலில் இயற்கையாக நடப்பதை அவ்வாறே நடக்க நாம் அனுமதித்தால் அது நல்ல விளைவுகளையே வழங்குகிறது. லேசான காய்ச்சல் என்பது உடல் தன்னைத் தானே சரி செய்வதன் வெளிப்பாடு. உடலில் ஏற்படும் பிரச்சினைகளை மருந்து இன்றி சரி செய்வதற்கான வேலையை உடல் செய்கிறது. எனவே, லேசான காய்ச்சல் என்பது நம் உடலுக்கு நல்லது. முதலில் ஏற்படும் லேசான காய்ச்சலை குணப்படுத்திக்கொள்வதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்காக பாக்டீரியா தொற்றை மீன்களின் உடலுக்குள் செலுத்தி, அவற்றின் செயல்பாட்டை ஆய்வு செய்தபோது, அதன் உடலுக்குள் இருந்தே நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதை அறிய முடிந்தது. நோய்த்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு வளையத்தை உருவாக்குவதோடு, அதைக் கட்டுப்படுத்தும் பணிகளையும் லேசான காய்ச்சலின் மூலம் உடல் செய்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in