

கிருஷ்ணகிரி: கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தை ஒட்டியுள்ள வேப்பனப்பள்ளி பகுதிகளில் கால்நடைகள் அதிகம் திருடப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதி கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேச எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. இங்குள்ள கிராமப்புற மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதானத் தொழிலாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாராமாக வீட்டின் வெளியே பட்டியில் கட்டப்படும் ஆடு, மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை
தெரிவித்துள்ளனர்.
இது குறித்துப் பேசிய உண்டிகைநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரண்ணா, ''கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் வெளியே கட்டப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கத்திரிப்பள்ளி கிராமத்தில் முருகேசன் என்பவரது ஒரு பசுமாடும், அதே கிராமத்தில் சோபா என்பவரது 2 பசுமாடுகளும் திருடு போயின. இதேபோல், உண்டிகைநத்தம் கிராமத்தில் 3 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்கள், இருமாநில எல்லையை ஓட்டி அமைந்துள்ளதால், மர்ம நபர்கள் ஆடு, மாடுகளை திருடிச்சென்று அவர்கள் பகுதிகளில் நடைபெறும் சந்தைகளில் விற்று விடுகின்றனர்.
இதனால் திருடுபோன கால்நடைகளை மீட்க முடிவதில்லை. இதுதொடர்பாக வேப்பனப்பள்ளி காவல்நிலையத்தில் புகாரளித்தாலும் போலீஸார் பெயரளவிற்குக் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. புகார்மனுவை வாங்கிக்கொண்டு அலைக்கழிக்கின்றனர். எனவே, இரவுநேர ரோந்து பணியை போலீஸார் அதிகரிக்க வேண்டும். மேலும், மாநில எல்லையோர சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். தற்போது கால்நடைகள் வளர்ப்போர், இரவு நேரங்களில் உறக்கமின்றி காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்'' என தெரிவித்தார்.