Published : 15 Mar 2023 06:03 AM
Last Updated : 15 Mar 2023 06:03 AM
சென்னை: குவஹாட்டியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சிறுமி அவசரக்கால பட்டனை அழுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அசாம் மாநிலம் குவஹாட்டியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 147 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. குவஹாட்டியைச் சேர்ந்த ஹேம்நாத் (61) என்பவர் தனது 8 வயது பேத்தி பிரசித்தா உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேருடன் விமானத்தில் பயணித்தார்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானி கேபினில் திடீரென அவசரக்கால எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. விமானத்துக்குள்ளும் அந்த சைரன் ஒலி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமானப் பணிப்பெண்களும், ஊழியர்களும் பதற்றத்துடன் பயணிகளைக் கண்காணித்தனர். அப்போது பயணி ஹேம்நாத்தின் பேத்தி பிரசித்தா தனது இருக்கைக்கு கீழே அவசரக்கால உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டை எடுத்து அணிந்து கொண்டிருந்தார்.
பணிப்பெண்கள் சிறுமியிடம் கேட்டபோது, “எனது இருக்கை அருகே இருந்த ஒரு பட்டனை அழுத்தினேன். நான் அமர்ந்திருந்த இ ருக்கை மேலே தூக்கியது. அதன் உள்ளே இருந்த இந்த லைஃப் ஜாக்கெட் வெளியே வந்தது. நான் விளையாட்டாக எடுத்து விட்டேன்” என கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பணிப்பெண்கள் லைஃப் ஜாக்கெட்டை சிறுமியிடம் இருந்து வாங்கி இருக்கைக்கு அடியில் பாதுகாப்பு பகுதியில் வைத்து மூடிய பின்னர் சைரன் ஒலி நின்றது.
குழந்தை தெரியாமல் பட்டனை அழுத்திவிட்டதாக, ஹேம்நாத் மன்னிப்பு கேட்டார். அதற்கு விமானி, “எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் முறைப்படி எனது உயர் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
விமானம் சென்னையில் தரையிறங்கியதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஹேம்நாத் குடும்பத்தினரை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையிலும் குழந்தை பட்டனை அழுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து, ஹேம்நாத் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
லைஃப் ஜாக்கெட்: விமான ஊழியர்கள் கூறுகையில், “விமானத்தில் ஒவ்வொரு இருக்கைக்கும் கீழே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் இருக்கும். அவசர நேரத்தில் மட்டும் பயணிகள் அவரவர் இருக்கைக்கு அருகே உள்ள அந்த பட்டனை அழுத்தி லைஃப் ஜாக்கெட்டை எடுத்து போட்டுக் கொள்ள வேண்டும்.
மற்ற நேரங்களில் இந்த பட்டனை யாரும் உபயோகப்படுத்தக் கூடாது. அதை மீறி யாராவது உபயோகப்படுத்தினால் இதைப்போல் அபாய சைரன் ஒலி விமானி கேபின் மற்றும் விமானம் முழுவதும் கேட்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT