

சென்னை: தமிழகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமைச் சேர்ந்த வளர்ப்பு யானையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வென்றதை அடுத்து, அந்த யானையைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள ஆசியாவின் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானை பராமரிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். 2017-ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சரகம் அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வந்து, ரகு என பெயர் வைத்து பொம்மனும், பெள்ளியும் பராமரித்து வருகின்றனர். இதேபோல், தாயை இழந்த மற்றொரு குட்டி யானைக்கு அம்மு குட்டி என பெயர் வைத்து அதனையும் பராமரித்து வருகின்றனர்.
தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானை குட்டிகளை பராமரிக்கும் பழங்குடியினத் தம்பதியின் கதையை ஆவணப்படமாக்கி இருக்கிறார் உதகையைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ். இந்நிலையில் தான் தற்போது ஆஸ்கர் விருது வென்றுள்ளது ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’. இந்த வெற்றியை அடுத்து, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள யானையைக் காண தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
"நான் லண்டனில் இருந்து வருகிறேன். இங்கிருக்கும் இரண்டு குட்டி யானைகள் ஆஸ்கார் விருது பெற்றதை அறிந்து அவற்றைப் பார்ப்பதற்காக வந்துள்ளோம். அவற்றைப் பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தேன். எனக்கு மிகவும் பிடித்த விலங்கு யானைகள். ஆஸ்கர் விருது வென்ற யானைகளை பார்த்துவிட்டதால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்" என்று சுற்றுலாப் பயணி கிரேஸ் தெரிவித்துள்ளார்.
இவரைப் போல நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமாக இருப்பதால், தெப்பக்காடு யானைகள் முகாம் களை கட்டத் தொடங்கியுள்ளது.