

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவரை விளைச்சல் அதிகரித்து, சந்தைகளில் போதிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி துவரை சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழாண்டிலும், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, ஓசூர், சூளகிரி, தளி, கெலமங்கலம் வட்டாரங்களில் 25 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஓசூர், ராயக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளி வாரச்சந்தைகளில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, போச்சம்பள்ளி, இருமத்தூர், அரசம்பட்டி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துவரையை அதிகளவில் கொள்முதல் செய்கின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு துவரை விளைச்சலும், விலையும் கை கொடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
100 டன்னுக்கு மேல்..: இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 2 ஆண்டுகளாக இயற்கை இடர்பாடுகளால் துவரை விளைச்சல் பாதிக்கப்பட்டது. நிகழாண்டில் தொடர் மழையால், துவரை சாகுபடி பரப்பும், விளைச் சலும் அதிகரித்துள்ளது. இதனால் சந்தைகளுக்கு துவரை அதிகளவில் விற்பனைக்கு வருகிறது.
குறிப்பாக போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 100 டன்னுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு துவரை தரத்தை பொறுத்து கிலோ ரூ.95-க்கு விற்பனையாகிறது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், அதிகளவில் துவரையை வாங்கிச் செல்கின்றனர்.
மண்கட்டிய துவரம் பருப்பு: குறிப்பாக துவரம் பருப்பின் விலை உயர்வால், கிராமப் புறங்களில் அதிகளவில் துவரை கொள்முதல் செய்து, செம்மண்ணை கலந்து வெயிலில் காய வைக்கின்றனர். இதனால் துவரையின் தோல் எளிதாக பிரிந்து வந்துவிடும். மண்கட்டிய துவரம் பருப்பு என்பது ஒரு பழமையான வேளாண் நுட்பம் ஆகும். மற்ற சாதாரண துவரம்பருப்பை காட்டிலும் சத்து மிகுந்தது. மண் கட்டுவதால், நீண்ட நாட்களுக்கு புழு மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படுவதில்லை, என்றனர்.
மணம், சுவை: இது குறித்து கிராமப்புற பெண்கள் கூறும்போது, கடையில் வாங்கும் பருப்புக்கும், மண் கட்டியிருக்கும் துவரம் பருப்பின் தரத்துக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. குறிப்பாக மண் கட்டிய துவரம் பருப்பு மூலம் செய்யப்படும் சாம்பார் கெட்டுப்போகாமல், மணம், சுவை நிறைந்து இருக்கும் என்றனர்.