

“தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு”: தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. சென்னை சைதாப்பேட்டையில் சிறப்பு காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சமீப காலமாக இந்தியா முழுவதும் H3N2 வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலைத் தடுக்க கடந்த வாரம் ஐசிஎம்ஆர் அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில் முதல்வர் உத்தரவின் படி 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையின் தாக்கம் கூடிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தினசரி 20 முதல் 25 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருந்து ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி முகக் கவசம் அணிந்தால் பாதிப்புகளை தவிர்க்கலாம்" என குறிப்பிட்டார்.
ஆளுநருக்கு அழுத்தம் உள்ளது: சபாநாயகர் அப்பாவு: ஆளுநருக்கு அழுத்தம் உள்ள காரணத்தால்தான் ஆன்லைன் ரம்மி சட்டத்தை திருப்பி அனுப்பும் நிலைப்பாட்டை எடுத்து இருப்பார் என்று நினைப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆன்லைன் ரம்மி அவரச சட்டத்திற்கும், சட்ட முன்வடிவு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இதற்கு காலம் தாழ்த்தியது ஏன் என்று தெரியவில்லை" என்று தெரிவித்தார்.
அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவி மரணம்: ஊட்டியில் அதிக அளவு சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி மரணம் அடைந்தது தொடர்பாக சுகாதார ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், அந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் கொத்தடிமையாக திமுக அரசு: இபிஎஸ்: என்எல்சி விவகாரத்தில் திமுக அரசு, மத்திய அரசின் கட்டளையை ஏற்று கொத்தடிமையாக செயல்படுவது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
“பாஜகவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும்” - ஜே.பி.நட்டா : தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்றும், தாமரை மலர்ந்தே தீரும் என்றும் கிருஷ்ணகிரியில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். மே
மேலும் அவர் கூறுகையில், "தமிழகத்தில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. மாநில கட்சிகள் பெரும்பாலும் வாரிசு அரசியல் கட்சியாக தான் உள்ளது. ஜம்மு - காஷ்மீர் முதல் தமிழகம் வரை பல மாநிலங்களில் உள்ள கட்சிகளில் வாரிசுகளின் வளர்ச்சியை தான் மையமாக கொண்டுள்ளது. வாரிசு அரசியலால் மாநில கட்சிகள் சுருங்கி வருகிறது.
மக்கள் அரசியலால் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்திற்கு நல்லதொரு சிறந்த ஆட்சியை பாஜகவால் மட்டுமே தர முடியும். இளைஞர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் என அனைத்து தரப்பினரின் வளர்ச்சியை மட்டுமே கொள்கையாக கொண்ட கட்சி பாஜக. குறிப்பாக தமிழக வளர்ச்சிக்காக பாடுபடும் ஒரே கட்சி பாஜக தான்” என்று அவர் பேசினார்.
இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆஸி. பிரதமர் உறுதி: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் மோடி இதனைத் தெரிவித்தார்.
சீமானுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர் கேள்வி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
40 ஆண்டுகள்... 40 செவிலியர்கள் - ரீயூனியன் நெகிழ்ச்சி: சென்னை மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்படும் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 1983-ம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்த 40 பேர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளராகவும், அரசு செவிலியர் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி வருகின்றனர். செவிலியர் துறையில் 40 ஆண்டுகளாக பணியாற்றி இந்த 40 செவிலியர்கள் வெள்ளிக்கிழமை சென்னை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளியில் ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து நினைவுகளை பகிர்ந்துக்கொண்ட ரியூனியன் நிகழ்வு, நெகிழ்ச்சியுடன் கவனத்தை ஈர்த்தது.
4-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 480 ரன்கள் குவிப்பு: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த இன்னிங்ஸில் கவாஜா 180 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
3-வது முறையாக சீன அதிபரானார் ஜி ஜின்பிங்: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். தொடர்ந்து 3-வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்படுவார். அதன்படி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி அவரை ஒருமனதாக தேர்வு செய்தது. அதோடு, அவர், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மவோவுக்குப் பிறகு 2 முறைக்கு மேல் சீன அதிபராகி இருக்கும் முதல் நபர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது