

அகமதாபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த இன்னிங்ஸில் கவாஜா 180 ரன்கள் மற்றும் கேமரூன் கிரீன் 114 ரன்கள் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியுள்ளது. இதற்கு கவாஜா மற்றும் கிரீன் இடையேயான பார்ட்னர்ஷிப் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அவர்கள் இருவரும் 208 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்திய அணி பவுலர்கள் அவர்களது கூட்டணியை தகர்க்க முயன்று அதில் தோல்வியை தழுவிக் கொண்டிருந்தனர். இறுதியாக இந்திய அணியின் எதிர்பார்ப்பை அஸ்வின் பூர்த்தி செய்தார். கிரீனை, 114 ரன்களில் வெளியேற்றி இருந்தார். தொடர்ந்து அலெக்ஸ் கேரி மற்றும் ஸ்டார்க் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 180 ரன்கள் எடுத்திருந்த கவாஜாவை அக்சர் படேல் அவுட் செய்தார்.
பின்னர் நாதன் லயன் மற்றும் டாட் மர்பி இடையே 70 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைந்தது. அதையும் அஸ்வின் தகர்த்தார். அவர்கள் இருவரையும் அவரே வெளியேற்றினார். முதல் இன்னிங்ஸில் அஸ்வின், 47.2 ஓவர்கள் வீசி 91 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இதில் 15 ஓவர்கள் மெய்டனாக வீசி இருந்தார். தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.