Published : 05 Mar 2023 07:25 PM
Last Updated : 05 Mar 2023 07:25 PM

பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூர பாலியல் வன்கொடுமை - வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற சிபிஎம் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, தனியார் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த மாணவி தொடர்ச்சியாக கும்பல் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி குழந்தை மீதான இக்கொடூரத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பரமக்குடியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பள்ளிக்குச் செல்லவிடாமல் ஏமாற்றி கடத்திச் சென்று கும்பல் பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளனர். அச்சத்துடன் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த விபரங்கள் சாதாரணமானதல்ல. பொள்ளாச்சியில் மாணவிகள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமை போன்று பரமக்குடியிலும் நிகழ்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

இக்கொடூர குற்றத்தில் ஈடுபட்டுள்ள பரமக்குடி நகர் அதிமுக அவைத்தலைவர் மற்றும் பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி, மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகர், ராஜா முகமது, கயல்விழி, உமா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இக்கொடூர பாலியல் வன்முறையில் நகரத்தின் பல முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதும், காவல்துறையில் உள்ள சிலரின் தொடர்பும் இதில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

எனவே, இவ்வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, முழுமையான விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விபரங்கள் வெளிவராமல் பாதுகாத்து, அவருக்கு உரிய நிவாரணம் வழங்கிடுவதோடு, அவர் படிப்பை தொடர்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x