

விழுப்புரம்: விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளராக மகிபால் என்பவர் பணியாற்றி வந்தார்.
அப்போது உடன் பணியாற்றி வந்த மற்றொரு உதவி ஆய்வாளர் ஒருவர் சமூக விரோத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில தினங்களிலேயே உதவி ஆய்வாளர் மகிபால் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆயுதப் படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் மகிபால், இது தொடர்பாக நியாயம் கேட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்திக்க பலமுறை முயன்றார். ஆனால் எஸ்பி அலுவலகத்தில் உள்ள காவல் ஆய்வாளர் தங்க குருநாதன் என்பவர் எஸ்பியை நேரில் சந்திக்க விடாமல் உதவி ஆய்வாளர் மகிபாலை தடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த உதவி ஆய்வாளர் மகிபால், “தான் ஓய்வு பெற இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் தன்னால் இனி உயிர் வாழ முடியாது. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். அதற்காக ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்” என்று கூறிதனது செல்போனில் இருந்து எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் எஸ்பி அலுவலக காவல் துறை ஆய்வாளர் தங்க குருநாதன் ஆகியோருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி வைத்து விட்டு நேற்று பிற்பகலில் இருந்து மாயமானார்.
இதையடுத்து மாயமான காவல்துறை உதவி ஆய்வாளர் மகிபாலை பல்வேறு இடங்களிலும் போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேச உதவி காவல் ஆய்வாளர் மகிபாலை செல்போனில் தொடர்பு கொண்டபோது, “உயர் அதிகாரிகள் எனது மெசேஜை பார்த்து விட்டு ஆயுதப் படையில் என்னை இருந்து விடுவிப்பதாக கூறியுள்ளனர். இதனால் நான் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன்” எனக் குறிப்பிட்டார்.