

வட மாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்: வெளி மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட மாநிலத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழகத்திற்கு சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும்.
வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழகத்தில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரயில் நிலையங்களில் வட மாநிலத்தவர் கூட்டம் அதிகம் ஏன்?: சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் சொந்த ஊருக்குச் செல்ல அதிக எண்ணிக்கையில் வட மாநில தொழிலாளர்கள் வந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இதுபற்றி நேரில் விசாரித்தபோது, ஹோலி பண்டிகையைக் கொண்டாடவே பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது தெரிய வந்துள்ளது. எனினும், ஒரு சில வட மாநிலத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் மத்தியில் போலி வீடியோக்கள் அச்சதை ஏற்படுத்தியுள்ளதும் தெரிய வருகிறது.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை: தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 3 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இத்தகைய வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர் பிரச்சினை: அண்ணாமலை சாடல்: "வட இந்தியர்களைப் பற்றி திமுகவின் எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துகள், அவர்களை பானிபூரி வாலா என்று திமுக அமைச்சர் அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் வட இந்தியர்களை வெளியேற்றக் கோருவதும்தான் இன்றைய இந்த நிலைக்குத் தூண்டியுள்ளது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு’: ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-வது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு - 20 மணி நேரத்திற்கு பிறகு சரிசெய்த மெட்ரோ: சென்னை மெட்ரோவில் ஆலந்தூர் - நங்கநல்லூர் இடையே வெள்ளிக்கிழமை சிக்னல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு சனிக்கிழமை அதிகாலையில் சரி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு பிறகு தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல் இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு பில் கேட்ஸ் புகழாரம்: சுகாதாரம் உட்பட பல துறைகளில் இந்தியாவின் முன்னேற்றம் நம்பிக்கை அளிப்பதாக பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடியை அவர் சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ்நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில்,“கரோனா தொற்றுப் பரவலின்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பு மருந்துகள் மில்லியன் கணக்கான மக்களின் உயிரை காத்தது. மேலும், இங்கு உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் இன்னும் பிற நோய்களுக்கு மருந்தாக உதவி வருகிறது. கோ-வின் உலகத்திற்கே முன்மாதிரி என பிரதமர் மோடி நம்புகிறார். அதை நானும் ஏற்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவன உரிமம் தற்காலிக ரத்து: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆறு இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்க்கு சீமான் அறிவுரை: விஜய்யின் ‘லியோ’ படத்தில் தலைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்கள் தானே படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய் மொழியை சிதையாமல் பார்த்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு நடிகர் விஜய்க்கும் உண்டு. முன்பு தமிழில் பட பெயர்கள் வெளியிடப்பட்டன. தற்போது ‘பிகில்’, ‘பீஸ்ட்’ என பெயர்கள் வருகின்றன. அதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
இதனிடையே, "நாம் தமிழர் கட்சி சந்தித்த இடைத்தேர்தல்களிலேயே ஈரோடு கிழக்கு முதன்மை இடத்தைப் பெற்றிருக்கிறது. புரட்சிக்கான முதல் விதையாகவே இதனைப் பார்க்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு அகற்றம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஏற்பட்டிருந்த தோல் புற்றுநோய் பாதிப்பு சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கெவின் தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சை தேவையில்லை எனவும் மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.