Published : 04 Mar 2023 06:50 AM
Last Updated : 04 Mar 2023 06:50 AM
ஈரோடு: விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமைப்புச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது: சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ‘இதை நிறைவேற்ற வேண்டும்; மின் கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஈரோடு கிழக்கு தேர்தலின் போதும், இக்கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்டோரிடமும் வலியுறுத்தி இருந்தோம். இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர்.
அதன்படி, விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாகவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சார அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், எங்களது கோரிக்கையை ஏற்று, 1,000 முதல் 1,500 யூனிட் வரையிலான மின்கட்டணத்தில் யூனிட்டுக்கு 35 பைசாவும், 1,500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலையில், விசைத்தறியாளர்கள் பயன்பெறுவர்.
விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின், மின்சாரத் துறை அமைச்சர், வீட்டுவசதித் துறை அமைச்சர், செய்தித் துறை அமைச்சர், திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கு விசைத்தறியாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT