Published : 02 Mar 2023 04:00 AM
Last Updated : 02 Mar 2023 04:00 AM
கோவை: கோவை வரதராஜபுரம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் முதல்வரின் இரண்டாம் கட்ட காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: கோவையில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 62 பள்ளிகளில் பயிலும் 7,255 மாணவர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 9 பள்ளிகளில் பயிலும் 1,119 மாணவர்கள், மதுக்கரை நகராட்சி பகுதிகளில் உள்ள 3 பள்ளிகளில் பயிலும் 730 பேர் என மொத்தம் 74 பள்ளிகளில் 9,104 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 59 பள்ளிகளில் பயிலும் 7,961 மாணவர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள 2 பள்ளிகளில் பயிலும் 384 மாணவர்கள், மதுக்கரை நகராட்சியில் ஒரு பள்ளியில் பயிலும் 222 மாணவர்கள் என மொத்தம் 8,567 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கோவையில் 136 பள்ளிகளில் 17,671 மாணவர்கள் பயனடைகின்றனர். மாணவர்களுக்கு காலை உணவாக ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா, காய்கறி சாம்பார், ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண்பொங்கல், கூடுதலாக ரவா கேசரி, சேமியா கேசரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், கிழக்கு மண்டல குழுத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினர் சிவா, பள்ளி தலைமை ஆசிரியர் மீனாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT