

மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் வெள்ளிக்கிழமை காலையுடன் முடிவுக்கு வந்தன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த விபத்தில் மொத்தம் 61 பேர் பலியாகியுள்ளனர். 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி குடியிருப்புக் கட்டிடம் கடந்த சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் தமிழகம், ஆந்திரம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
சம்பவம் நடந்த அன்று சம்பள நாள் என்பதால் அனைத்து தொழிலாளர்களும் கட்டிடத்தின் அடிப்பகுதியில் குழுமியிருந்ததாக சொல்லப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புப் படையினர் மற்றும் தமிழக காவல் துறையினர் என சுமார் 2,500 பேர் ஈடுபட்டு வந்தனர்.
‘தெர்மல் கேப்சரிங்’ கேமராக்கள், இதயத்துடிப்பைக் காட்டும் கருவி போன்ற நவீன சாதனங்களும், மோப்ப நாய்களும் இந்த மீட்புப் பணிகளில் பயன்படுத்தப்பட்டன.
அரசுகள் உதவி
விபத்து நடந்த இடத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 29-ம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். தமிழகத்தின் இதர கட்சித் தலைவர்களும் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்ற மாநில தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சமும் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 1-ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
தொடர்ந்த மீட்பு பணிகள்
கடந்த சனிக்கிழமை தொடங்கிய மீட்புப் பணிகள் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை இரவு பகல் பாராமல் நடந்தது. இதில் இதுவரை 61 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.
மீட்பு பணிகள் நிறைவு
மீட்புப் பணிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே நிறுத்தப்பட்டன. மீட்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் தர் அறிவித்தார்.
இடிந்த பகுதிக்கு சீல்
11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை சுற்றி 150 அடி சுற்றளவுக்கு முழுவதுமாய் அடைக்கும் பணிகளும் வெள்ளிக்கிழமை மாலை நிறைவடைந்தன. மேலும் ஏற்கெனவே கட்டப்பட்ட 11 மாடி கட்டிடத்தை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.