Published : 26 Feb 2023 04:56 PM
Last Updated : 26 Feb 2023 04:56 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக ஆ.அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து, கமல்ஹாசன் மேற்கொண்ட பரப்புரை வரலாறு காணாத வெற்றியை அடைந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கமல்ஹாசனின் உரையைக் கேட்க திரண்டனர். பல்வேறு பணிகளுக்கு இடையே இந்த பரப்புரைக்காக நேரம் ஒதுக்கியமைக்கும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றும் நல்வாய்ப்பினை கட்சியின் நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் அளித்தமைக்காகவும் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு சார்பாக தலைவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.
2. கமல்ஹாசன் ஈரோடு கிழக்குத் தொகுதியில் மேற்கொண்ட பரப்புரை வெற்றிகரமாக நிகழ பங்களிப்பாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைக் கட்சியினர், அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சியின் நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நற்பணி இயக்க நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுதல்களும் தெரிவிக்கப்படுகிறது.
3. 2018-ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தவர் ஆ. அருணாச்சலம். மீண்டும் நமது கட்சியில் இணைந்த ஆ. அருணாச்சலம், ‘பாரத் ஜோடா யாத்ரா’, ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம்’ ஆகிய முன்னெடுப்புகளில் நமது கட்சியினர் அனைவரையும் ஒருங்கிணைத்து, தோழமைக் கட்சிகளுடன் ஒத்திசைந்து சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தினார்.
தகுந்த நேரத்தில் தாய் வீட்டிற்குத் திரும்பிய செயல்வீரர் ஆ.அருணாச்சலத்தை நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய இந்த சபை மனதாரப் பாராட்டுகிறது. கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு அருணாச்சலம் கமல்ஹாசனின் வழிகாட்டுதலின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்று அறிவிக்கப்படுகிறது.
4. மக்கள் நீதி மய்யத்திற்கு மகளிரணியை வலுப்படுத்தும் வகையில் மகளிரணியுடன், மய்யம் மாதர் படை இணைக்கப்படுகிறது. மார்ச் 8-ஆம் தேதி சர்வதேசப் பெண்கள் தினத்தை மக்கள் நீதி மய்யத்தின் மகளிரணி சிறப்பான முறையில் கொண்டாட முடிவெடுக்கப்படுகிறது.
5. கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும், வேறு சில பொதுநலச் சேவைகளை மேற்கொள்ளவும் கமல்ஹாசன் ‘கமல் பண்பாட்டு மய்யம்’ எனும் இலாப நோக்கமற்ற, அரசியல் நோக்கமற்ற அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். தலைவரின் முன்னெடுப்புக்கு நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
6. 2024 பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...