

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு, திமுக மற்றும் அதிமுகவினர் ‘பரிசு மழை’ பொழிந்து வருவதால், தொகுதி முழுவதும் உற்சாகம் தொற்றிக் கொண்டுள்ளது. அதேவேளையில், இந்தப் போக்கு சமூக ஆர்வலர்களையும், அரசியல் நோக்கர்களையும் கவலையடைச் செய்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரம் நாளை (சனிக்கிழமை) முடிவடையவுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுகவினர், பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை பாகம் வாரியாக பிரித்து, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை வாக்குகள் உள்ளன என்பது குறித்த விபரம் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சி நிர்வாகிகள் கையிலும் உள்ளது.
பணப் பட்டுவாடா தீவிரம்: கடந்த இரு நாட்களாக பணம் மற்றும் பரிசுப் பொருள் பட்டுவாடா தீவிரமடைந்துள்ளது. திமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ 3000, அதிமுக சார்பில் ஒரு வாக்கிற்கு ரூ.2000 என தொகுதி முழுவதும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களிடம் பேசியபோது, அவர்கள் அளித்த தகவல்: “கடந்த 10 நாட்களாகவே, திமுகவினர் தொடர்ந்து வீட்டுக்கு வந்து வாக்குகளை சரிபார்த்து, எங்களுடன் நட்பாக உள்ளனர். மாலை நேரங்களில் அவர்களது கூடாரத்திற்கு சென்று மூன்று மணி நேரம் அமர்ந்திருந்தால் ரூ.500 மற்றும் உணவு கொடுக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில், பெரும்பாலான வீடுகளுக்கு ஆடு, கோழி, மீன் இறைச்சி வழங்கப்பட்டது. காதணி விழா என்ற பெயரில் வெவ்வேறு இடங்களில் பிரியாணி விருந்தும் கொடுக்கப்பட்டது. இதற்கென வாகன வசதியும் செய்து தரப்பட்டது.
டோக்கனால் கூடும் எதிர்பார்ப்பு: சில பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களை, மேட்டூர் அணை, ஏற்காடு, சென்னிமலை, கொடிவேரி அணை என பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இது தவிர குக்கர், வெள்ளிக் கொலுசு, வேட்டி, சேலை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக வெள்ளி டம்ளர், ஸ்மார்ட் வாட்ச் போன்றவை விநியோகிக்கப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்களான, பால் குக்கர், தயிர் கடையும் ஜார், காய்கறி வெட்டும் இயந்திரம், லேப்டாப் பேக் உள்ளிட்டவையும் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வாக்குகள் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்திற்கு, வாஷிங் மிஷின் வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதோடு, வீடுகள் தோறும் ஒரு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நாளில், உங்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது என்று டோக்கனை வழங்கிய திமுகவினர் தெரிவித்துள்ளனர். என்ன பரிசு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுகவினரைப் பொறுத்தவரை, அதிக அளவில் வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது. 3 முதல் 5 வாக்குகள் உள்ள வீடுகளுக்கு வெள்ளிக் கொலுசு, சிறிய அகல் விளக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளியிலான சிறு டம்ளர் வழங்கப்பட்டது. யார் கதவைத் தட்டினாலும், என்ன பரிசு கிடைக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்புடன் அனைவரும் இருக்கும் நிலை உள்ளது” என்று அவர்கள் கூறினர்.
வைரலாகும் வீடியோ: திமுக சார்பில் வழங்கப்பட்ட வெள்ளி டம்ளர் அளவில் பெரியதாக உள்ள நிலையில், அதிமுகவினர் வழங்கிய வெள்ளி டம்ளர் மிகச் சிறியதாக உள்ளது. அதிமுகவினர் வழங்கிய பரிசு, எதற்கும் பயன்படாது என்பது போல், திமுகவினர் தயாரித்துள்ள கலகலப்பான வீடியோவும் தொகுதியில் வைரலாகி வருகிறது.
பரிசுப்பொருள் விநியோகம் குறித்து ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறும்போது, “குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக புகார் வந்ததையடுத்து, உடனுக்குடன் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இங்கு யாரும் பரிசுப்பொருள் கொடுக்கவில்லை என்று வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், தேர்தல் பறக்கும்படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளனர்” என்றார்.