Published : 23 Feb 2023 04:35 AM
Last Updated : 23 Feb 2023 04:35 AM

மியூசிக் அகாடமியில் பிப்.28-ம் தேதி மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் நினைவு விருது வழங்கும் விழா

சென்னை: மாண்டலின் மேதை யூ. ஸ்ரீனிவாஸின் பிறந்த நாளையொட்டி `தி கிரேட் மாண்டலின்' இசை நிகழ்ச்சி மியூசிக் அகாடமியில் பிப்ரவரி 28 அன்று நடக்கிறது.

மேற்கத்திய வாத்தியமான மாண்டலினை கர்னாடக இசைக்கான கொடையாக ஆக்கியதில் மழலை மேதை யூ. ஸ்ரீனிவாஸின் பங்கு அளப்பரியது. `சிவோஹம்' என்னும் அமைப்பின் மூலமாக இளம் தலைமுறையினருக்கு மாண்டலின் கற்றுக் கொடுத்தார். கடந்த 2014-ம் ஆண்டு தன்னுடைய 45-வது வயதில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைந்தார். அதன்பிறகு, அவரின் பிறந்த நாளில் நடக்கும் நிகழ்ச்சியில் ஆண்டுக்கு இரண்டு இசைக் கலைஞர்களுக்கு யூ.ஸ்ரீனிவாஸ் நினைவு விருதும், ரூ. 1லட்சம் பணமும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்து எஸ்.எஸ்.இண்டர்நேஷனல் லைவ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணன் கூறியது: கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான வாய்ப்பை எங்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸின் குடும்பத்தினருக்கு எங்களின் நன்றி. நிகழ்ச்சியை நாங்கள் வடிவமைக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு யூ.ஸ்ரீனிவாஸ் நினைவு விருது வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான மாண்டலின் யூ. ஸ்ரீனிவாஸ் நினைவு விருதை கர்னாடக இசைப் பாடகிகள் ரஞ்சனி- காயத்ரி, மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் பெறவிருக்கின்றனர்.

யூ.ஸ்ரீனிவாஸின் மாணவர்கள் வழங்கும் மாண்டலின் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும். பிப்ரவரி 28-ம் தேதி நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான இலவச அழைப்பிதழை இம்மாதம் 24, 25 ஆகிய நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மியூசிக் அகாடமியில் பெற்றுக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x