Published : 20 Feb 2023 06:10 PM
Last Updated : 20 Feb 2023 06:10 PM
ஜேஎன்யு-வில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கடுமையாக கண்டித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், “பல்கலைக்கழகங்கள் வெறும் பாடம் கற்றலுக்கு மட்டுமல்ல; கலந்துரையாடல், விவாதம், மாறுபட்ட கருத்துகளுக்குமான இடங்கள் ஆகும். புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைக் கோழைத்தனமாகத் தாக்கியதோடு, தந்தை பெரியார், காரல் மார்க்ஸ் போன்ற பெருந்தலைவர்களின் படங்களையும் அடித்து நொறுக்கியுள்ள ஏபிவிபி அமைப்பினரின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு; பல்கலை நிர்வாகம் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற மற்றும் ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும்போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2-வது தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம்: ஓபிஎஸ்: அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற இரண்டாவது தர்ம யுத்தத்தை நடத்தி வருவதாகவும், விரைவில் மக்கள் தீர்ப்பு வரும் என்று முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி இதுவரை புகார் வரவில்லை: சத்யபிரத சாகு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு , "ஈரோடு கிழக்கில் சட்டம், ஒழுங்கு சுமுகமான முறையில் உள்ளது. பல புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி இதுவரை புகார் எதுவும் என்னிடம் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்: "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்ற தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் திடீர் பயணம்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடையும் நிலையில், உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு உலகையே, குறிப்பாக ரஷ்யாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இந்த எதிர்பாராத பயணத்திபோது உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளார் ஜோ பைடன். ராணுவ தளவாடங்கள், குறிப்பாக உக்ரைன் நீண்ட நாட்களாக கேட்டுவந்த ஹோவிட்சர், ஜாவ்லின் ஆயுதங்கள் தொலைதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் ஆகியனவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார். அரை பில்லியன் டாலர் அளவிலான உதவிகளை அவர் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு பகிரங்க எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது புதிதாக பல்வேறு தடைகளை அறிவித்துள்ளார். அவரது பயணம் குறித்து பைடன், "உக்ரைன் மீது ரஷ்யா கொடூர தாக்குதலைத் தொடங்கி ஓராண்டைக் காணவுள்ள நிலையில் நான் இன்று கீவ் நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை காணவந்துள்ளேன். இது எதற்காக என்றால் உக்ரைன் அதன் ஜனநாயகம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடை பேண அமெரிக்கா உதவி தொடர்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்லிக் காட்டவே.
ஓராண்டுக்கு முன் புதின் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியபோது உக்ரைன் வலுவற்றது, மேற்குலகம் பிரிந்துகிடக்கிறது என்று நினைத்தார். எங்களை வீழ்த்த முடியும் என நினைத்தார். ஆனால், அவர் அவ்வாறாக நினைத்தது மிகப் பெரிய தவறு" என்று கூறியுள்ளார். இதனை வெள்ளை மாளிகை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த கபடி பயிற்சியாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.7
நடிகர் மயில்சாமி உடல் தகனம்: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். சனிக்கிழமை இரவு சிவராத்திரியை கோயிலுக்கு சென்ற நடிகர் மயில்சாமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் வீடு திரும்பினார். 3.30 மணி அளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. சாலிகிராமத்திலுள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் சென்ற இறுதி ஊர்வலத்துக்குப் பின்னர், வடபழனி மின் மயானத்தில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, நடிகர் மயில்சாமிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், "கேளம்பாக்கம் அருகே உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலில் நான் பாலபிஷேகம் செய்யவேண்டும் என்ற மயில்சாமியின் ஆசையை நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்தார்.
பேனா நினைவுச் சின்னம்: 12 பேர் எதிர்ப்பு; 22 பேர் ஆதரவு: சென்னை மெரினாவில் கடலுக்குள், கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 12 பேர் எதிர்ப்பும், 22 பேர் ஆதரவும் தெரிவித்ததாக, கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: குஜராத் அரசு வலியுறுத்தல்: கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகள் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு வலியுறுத்தி உள்ளது.
கட்சி பெயர், சின்னம்: உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்கு: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இரு அணியினரும் சிவ சேனாவின் வில் அம்பு சின்னத்திற்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த நிலையில், ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே அதிக எம்எல்ஏக்கள் இருப்பதால் அதற்கே வில் அம்பு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் கடந்த 17ம் தேதி தனது முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT