

புதுடெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு குற்றவாளிகள் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு வலியுறுத்தி உள்ளது.
2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ராம பக்தர்கள் பயணித்த ஒரு பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. தூக்கு தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபரூக் என்பவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி ஜாமீன் வழங்கியது. அவர் 17 ஆண்டுகள் சிறையில் இருந்ததை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த வழக்கில் மேலும் பலர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அது குறித்து குஜராத் அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை ஏற்று குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட 11 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இதனை நாங்கள் மிக முக்கியமானதாகக் கருதுகிறோம். அரிதிலும் அரிதான வழக்கு இது. சபர்மதி ரயிலின் எஸ்-6 கோச் வெளிப்புறமாக பூட்டப்பட்டு பிறகு தீ வைக்கப்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் என 59 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதை வெறும் கல் எரிந்த சம்பவமாக குற்றவாளிகள் தரப்பு வழக்கிறஞர்கள் வாதிடுகின்றனர். சபர்மதி ரயிலின் எஸ்-6 கோச், வெளிப்புரமாக பூட்டப்பட்டு, தீ வைக்கப்பட்டு அதோடு, வெளியில் இருந்து கற்களைக் கொண்டு தாக்கிய சம்பவம் இது. எனவே, அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. மாறாக அவர்களுக்கு தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த வேண்டும்'' என வாதிட்டார்.