

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், 5 சதவீத இயந்திரங்களில் தலா 1000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாதிரி வாக்குப்பதிவு இன்று நடந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படவுள்ள, 1430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்றது.
சின்னங்கள் பொருத்தப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்களில், மாதிரி வாக்குப்பதிவு இன்று காலை நடந்தது. மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதனை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவகுமார் கூறியதாவது
வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்களின் பெயர், சின்னம் கொண்ட பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று நிறைவடையும். சின்னம் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், 5 சதவீத இயந்திரங்களில், விவிபேட் இயந்திரத்தை பொருத்தி, தலா 1000 வாக்குகள் பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மை தன்மையை நிரூபிப்பதற்காக, இந்த மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இடைத்தேர்தலில் வாக்குப்பதிவிற்குத் தேவையான அனைத்து இயந்திரங்களும், கூடுதலான 20 சதவீத இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ 54 லட்சத்தை, தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை பறிமுதல் செய்துள்ளனர். அனுமதியின்றி செயல்பட்ட தேர்தல் பணிமனைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 4 பணிமனைகள் அனுமதி பெற்று திறக்கப்பட்டுள்ளன.
80 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட 354 தபால் வாக்குகளில், சேகரிக்கப்படாமல் உள்ள 6 வாக்குகளை இன்று சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூத் ஸ்லிப் வழங்கும் பணி நேற்றைய தினம் 20 சதவீதம் நிறைவடைந்தது தொடர்ந்து 24 ஆம் தேதி வரை இப்பணி நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.