

சூளகிரி சந்தையில் கொத்தமல்லி, கீரைகள் விலை குறைந்ததால், அறுவடை கூலி, போக்குவரத்து செலவுக்குகூட கிடைப்பதில்லை எனக் கூறி, கால்நடைகளை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை வட்டங்களில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ணநிலை காரணமாக காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல், சூளகிரி வட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், குறிப்பாக சூளகிரி, புலியரசி, செம்பரசனபள்ளி, மாரண்டபள்ளி, அத்திமுகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கொத்தமல்லி மற்றும் கீரை வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இதேபோல், கிருஷ்ணகிரி, வேப்பனப் பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கொத்தமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றை சூளகிரி கொத்தமல்லி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கிருந்து கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் வாகனம் மூலம், வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். தினமும் டன் கணக்கில் கொத்தமல்லி, கீரைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த பருவத்தில் பெய்த நல்ல மழையால், நீர்நிலைகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் கொத்தமல்லி, கீரைகளை பயிரிட்டனர். இதனால் தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலை வெகுவாக சரிந்துள்ளது.
ஒரு கட்டு விலை ரூ.2
இதுதொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொத்தமல்லி ஒரு கட்டு ரூ.50-க்கு குறையாமல் விற்பனையானது. கீரை கட்டு ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு வாரமாக விலை வெகுவாக சரிந்து வருகிறது. நேற்று ஒரு கட்டு ரூ.2-க்கு விற்பனையானது. பல மடங்கு விலை சரிந்துள்ளதால், அறுவடை, போக்குவரத்து கூலி கூட கிடைப்பதில்லை. இதனால் ஆடு, மாடுகளை கொத்தமல்லி, கீரை தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.