

கர்நாடக வனத்துறை சுட்டத்தில் தமிழக மீனவர் உயிரிழப்பு: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கர்நாடக வனப்பகுதிக்கு மான் வேட்டையில் ஈடுபட்டதாக தமிழக மீனவரை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தால், தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக வனத்துறையால், வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில், தமிழக மீனவர்கள் நான்கு பேர் நடமாடியதை, வனத்துறை அதிகாரிகள் பார்த்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக வனத்துறையினர், நால்வரையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ராஜா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து, ஆற்றுக்குள் விழுந்துள்ளார். மற்றவர்கள் ஆற்றில் குதித்து தப்பி விட்டனர். ஊர் திரும்பியவர்கள் ராஜாவை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் சுட்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பாலாறு செக்போஸ்ட்டில் அதிகளவு போலீஸார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை அடியாறு வழியாக காவிரி ஆற்றில் ராஜா உடல் மிதந்து வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் காவிரி கரையோரம் திரண்டனர். தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி ராஜாவின் உடலை மீட்டனர்.
கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டையாடிய போது, வனத்துறை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராஜா உயிரிழந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருமாநில எல்லையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பி சிவக்குமார் எல்லைப் பகுதிக்கு விரைந்த சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பதற்றச் சூழலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தமிழக-கர்நாடக எல்லையில் இரு மாநிலங்களுக்கு இடையே போக்குரவத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களை ஒட்டியுள்ள கிராம மக்கள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க ரோந்து சென்று, கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட உத்தரவு: டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அதானி விவகாரம்: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அதானி குழும நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நிபுணர் குழு அமைக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசால் அளிக்கப்பட்ட மூடிய பரிந்துரை கடிதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பான வழக்கில், நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் செபியின் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. இதற்கு, உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைப்பதில் ஆட்சேபம் இல்லை என செபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நிபுணர் குழு அமைக்கும் விவகாரத்தில் ஆட்சேபம் இல்லை என்று மத்திய அரசும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் சீலிடப்பட்ட பரிந்துரை கடிதம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக சில பரிந்துரைகளை அரசு அதில் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்தப் பரிந்துரையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அதனை திருப்பி அளித்துவிட்டது. இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் நலன் கருதி வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த தாங்கள் விரும்புவதாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜெ.பி. பர்திவாலா ஆகியோரைக் கொண்ட அமர்வு தெரிவித்தது.
அதோடு, நிபுணர் குழு அமைப்பது தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. நிபுணர் குழுவில் யார் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அரசு அல்லது மனுதாரர்கள் அளிக்கும் பரந்துரையை ஏற்கப் போவதில்லை என்றும், நிபணர் குழுவை தாங்களே முடிவு செய்யப் போவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதானியின் அசுர வளர்ச்சிக்கு மோடி அரசே காரணம்: காங்: சென்னையில் செய்தியாளகளிடம் பேசிய தெலங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, "மோடி பிரதமராக பதவியேற்ற 2014-ஆம் ஆண்டில் உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 609-வது இடத்தில் இருந்த கவுதம் அதானி, 2022-ல் இரண்டாவது இடத்திற்கு வந்த அதிசயத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அசுர வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் ஆதரவுதான் காரணம் என்பதை எவராவது மறுக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் மீது பாஜக கடும் குற்றச்சாட்டு: அதானி குழுமம், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பெர்கின் குற்றசாட்டை சுட்டிக்காட்டி அதானியின் வணிக சாம்ராஜ்ஜியத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு, முதலீடு செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா என்ற நம்பிக்கையை உலுக்கி இருக்கிறது. இது இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பை இது உருவாக்கும் என்று ஹங்கேரிய அமெரிக்க தொழிலதிபரான ஜார்ஜ் சோரஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி,இந்தியாவில் இருக்கும் ஜனநாயகத்தை அழித்துவிட்டு, ஆட்சியில் தங்களுக்கு சாதகமான நபர்களை அமர வைக்கும் நோக்கில் ஜார்ஜ் சோரஸ் செயல்படுவதாகவும், இதற்கு கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றைக் குரலில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ஸ்மிருதி இரானி வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடாகவில் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்: விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்னும் 100 நாட்களுக்குள் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரும் நிதி அமைச்சருமான பசவராஜ் பொம்மை, கடைசி பட்ஜெட்டை அம்மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். கடந்த 2 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்த பசவராஜ் பொம்மை, இந்த ஆண்டு உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நிறைவு: பிபிசியின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை முடிவடைந்தது. பிபிசியின் டெல்லி அலுவலகத்தைச் சேர்ந்த 10 உயர் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்தனர். இரவு பகலாக கடந்த 3 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை முடிவடைந்தது.
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் ராஜினாமா: இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம், சேத்தன் சர்மாவிடம் நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சேத்தன் சர்மா மீது இந்திய அணி நிர்வாகம் தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ எற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 263 ரன்களுக்கு ஆல் அவுட்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இன்னிங்ஸை தொடங்கினர். இந்தநிலையில் 78.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. முதல் இன்னிங்ஸில் ஷமி, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்திய அணிக்காக விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்: அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்து அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம். சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.